திருப்பூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் இஸ்லாமிய பெண்கள் உள்பட 550 பெண்கள் பொங்கல் வைத்தும் முளைப்பாரி எடுத்தும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
தமிழர்களால் பாகுபாடில்லாமல் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் திருப்பூர் சாமுண்டிபுரத்தில் மதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மதிமுக நிர்வாகிகள் துரைசாமி, சிவபாலன், நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தனர். இதில் தெருவெல்லாம் 550 பெண்கள் அடுப்பு வைத்து புதுப்பாணையில் பொங்கலிட்டனர்.
சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில் இஸ்லாமிய பெண்கள் உள்பட அனைத்து மத பெண்களும் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினார்கள். மேலும் திரளாக பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
அப்போது முளைப்பாரி எடுத்து வந்த பெண்கள் குலவையிட்டு உற்சாக நடனமாடி வந்தனர். ஊர்வலத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற நடன நிகழ்வுகளும், பறை இசை முழக்கமும் நடைபெற்றது. ‘சாதி, மத வேறுபாடில்லாத சமுதாயத்தை உருவாக்கவே இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நாகராஜ் தெரிவித்தார்.