காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு -காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தூத்துக்குடி S.P. அருண் பாலகோபாலன் தலைமையில் அறிவுரை கூட்டம்
வருகிற 12.01.2020 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் தலைமையில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு 695 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 3947 பொது விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடியில் 4 மையங்களில் வருகிற 12.01.2020 அன்று நடைபெற உள்ளதால் காவல்துறையினர் செய்ய வேண்டிய பணி குறித்து இன்று (09.01.2020) தூத்துக்குடி அருணாச்சலம் மாணிக்கவேல் மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விண்ணப்பதாரர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கீழ்க்கண்டவாறு அறிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலிருந்து நுழைவுச்சீட்டு எடுத்த நகலில் புகைப்படம் இல்லாத விண்ணப்பதாரர் புகைப்படத்தை ஒட்டி புகைப்படத்தின் மீது அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெற்று தேர்வுக்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.
எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ளவரும் விண்ணப்பதாரர்கள் காலை 08.30 மணி முதல் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். சரியாக காலை 10.00 மணிக்கு தேர்வு ஆரம்பிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும் அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் கொண்டு வரக்கூடாது.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு வரும்போது அழைப்பு கடிதம், அடையாள அட்டை, பரிட்சை அட்டை மற்றும் கருப்பு அல்லது நீல நிற பந்துமுனை பேனா (Ball Point Pen) ஆகியவற்றுடன் வரவேண்டும்.
மேலும் தேர்வு அழைப்புக் கடிதத்தில் உள்ள அறிவுரைகளை படித்துப் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தெரிவித்துள்ளார்.