திருப்பூர் மாநகரம் பனியன் தொழிலாளிகள் நிறைந்த நகரமாகும். இங்கு 10 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட பனியன் தொழிலாளிகள் உள்ளனர். இந்த பனியன் தொழிலாளர்கள் எண்ணிக்கை மற்றும் பனியன் தொழில் காரணமாக திருப்பூரில் ஆயிரக்கணக்கான ஓட்டல், பேக்கரிகள், டீ கடைகள் உள்ளன.
ஒவ்வொரு தேநீர் இடைவேளைக்கும் பனியன் தொழிலாளிகள் அதிகளவில் வெளியே வந்து டீ மற்றும் திண்பண்டங்கள் சாப்பிடுவதால், இங்கு டீ கடைகளும், பேக்கரிகளும், தாறுமாறாக முளைத்து உள்ளன.
இந்த நிலையில், திருப்பூரில் உள்ள டீ கடைகள், பேக்கரிகள் மற்றும் ஓட்டல்களில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் பகுதி பொதுமக்கள் சீலர் கூறியது:
திருப்பூரில் உள்ள ஓட்டல், பேக்கரி மற்றும் டீ கடைகளில் பொதுமக்கள் குடிப்பதற்கு மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரையே வழங்குகிறார்கள். சில கடைகளில் லாரி மூலம் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி தொட்டிகளில் விட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள். இவ்வாறு குடிநீர் சேகரிக்கும் தொட்டிகளை ஆண்டுக்கணக்கில் டீ கடை மற்றும் பேக்கரி காரர்களும், ஓட்டல்கடைக்காரர்களும் சுத்தம் செய்வதில்லை. இதனால் பல நேரங்களில் பொதுமக்கள் வயிற்று உபாதை மற்றும் காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.
எனவே மாநகராட்சி சுகாதாரத்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு பிரிவினர் இணைந்து திருப்பூரில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள் னற்றும் டீ கடைகளில் உள்ள குடிநீர் தேக்க தொட்டிகள், டிரம்கள் சரியாக கழுவி சுத்தமாக வைக்கப்படுகிறதா? குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் குடிநீர் தொட்டி சுத்தம் செய்த நாள் என்பது குறித்த தகவலை எழுதி கடையின் முகப்புகளில் வாடிக்கையாளர்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வண்ணம் ஒட்ட வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யாத கடைக்காரர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.
Tags:
தமிழகம்