திருப்பூர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூ மார்க்கெட் இடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் 96 கடைகள் செயல்பட்டு வருகிறது இந்த பூ மார்க்கெட்டினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு இருந்தது இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மாநகராட்சியில் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது எனினும் மாற்று இடங்களில் கடைகளை மாற்றம் செய்ய வியாபாரிகள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பூ மார்க்கெட்டில் உள்ள கழிவறைகள் மாநகராட்சி ஊழியர்களால் இடிக்கப்பட்டது. கடைகள் திறக்கப்பட்டுள்ள நேரத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பகுதியிலும் இடிக்கும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டதை கண்டித்தும் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ள நிலையில் அவசர கதியாக இடிக்கப்படும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் பூ மார்க்கெட் வியாபாரிகள் 100க்கும் மேற்பட்டோர் காமராஜர் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.