ஜல்லிக்கட்டு களத்தில் சந்தோஷ தருணம்!!! -ஆசிரியர் சொக்கலிங்கம்

தேவகோட்டை . சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி , தலைமையாசிரியர், லெ . சொக்கலிங்கம் எழுதுகிறார்...


''நண்பர்களே கடந்த 3 ஆண்டுகளாக தோழர் முத்துமாரியப்பன் உதவியுடன் குடும்பத்துடன் ஜல்லிக்கட்டு நெற்குப்பையில் கண்டு ரசித்து வருகிறோம்.


மிகவும் மகிழ்ச்சியான தருணம் . விளையாட்டினை நேரில் காணும் வாய்ப்பினை மிக அருமையாக ஏற்படுத்திக் கொடுக்கும் தோழர் முத்துமாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . முதலில் இந்தியன் பேங்க் அருகில் உள்ள நண்பர் பழனியப்பன் அவர்களின் அண்ணன்  வீட்டில் இருந்து ஜல்லிக்கட்டை பார்ப்போம் .


பிறகு ராஜ வீதியில் நடக்கும் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக ஓரிடத்தில் நின்று முழுவதுமாக பார்த்து ரசிப்போம்.  இந்த முறை மிக அதிக அளவிலான மக்கள் கூட்டம் வந்திருந்தது. மாடுகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. மாடுகள் ஓடுவதும் , சீறிப் பாய்ந்து வரும் காளைகளை சிறப்பாக பிடித்த வீரர்கள் என்று நேரில் காணும் பொழுது அந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


கால் வலி தெரியாமல் தொடர்ந்து 2 மணி நேரம் 3 மணி நேரம் நின்று கொண்டு பார்த்தாலும் இது மிகவும் அருமையான தருணமாக அமைந்திருந்தது. தோழர் முத்துமாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாடுகளை கட்டியிருக்கும் தொழுக்களையும்  நாங்கள் இந்த முறை சென்று கண்டு மகிழ்ந்தோம் .


மாடுகள் சீறி வரும் பொழுது உள்ளூர்க்காரர்கள் பிடிக்காமல் மற்ற ஊர்க்காரர்கள் பிடிக்க வேண்டுமென்று அறிவிப்பும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். சில மாடுபிடி வீரர்கள் குத்துபட்டு ஆங்காங்கே கிடந்தார்கள். இருந்தபோதிலும் தொடர்ந்து நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்தது . நெற்குப்பையில் நல்ல ஏற்பாடுகள் அனைத்து இடத்திலும் செய்திருந்தனர் . தமிழர்களின் வீர விளையாட்டை நேரில் கண்டபோது எங்களுக்கு புல்லரிப்பாக இருந்தது.பல வீரர்கள் மீண்டும் ,மீண்டும் சீறி வரும் காளைகளை அடக்கியது நெகிழ்வான தருணங்கள்.


அருமையான வாய்ப்பினை வழங்கிய தோழர் முத்துமாரியம்மனுக்கு  மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்வோம் .''


Previous Post Next Post