திருப்பூர் அருகே 600 ரூபாய் கடனை திருப்பிக் கேட்ட இளைஞரை அடித்துக் கொன்ற நண்பர்கள் கைது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம்
அருகே உள்ள கெருடமுத்தூரை சேர்ந்தவர் தங்கராஜ் வயது 52.இவர் தனது மனைவி ஜான்சிராணி மற்றும் நந்தகுமார் வயது 24, பாரதிராஜா 20 ஆகிய 2 மகன்கள் மற்றும் அமுதவல்லி 21 ஆகியோருடன் குடியிருந்து கொண்டு விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 12ம் தேதி காலை தங்கராஜ் வெளியூர் சென்றிருந்த சமயத்தில் அவர்களது வீட்டுக்குச் சென்ற நந்தகுமாரின் நண்பர்கள் சிலர் நந்தகுமாரை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளனர்.
மாலை நந்தகுமார் மயங்கிய நிலையில் கிடப்பதாக அழைத்துச் சென்ற நண்பர் விஜய் நந்தகுமாரின் தாய் ஜான்சிராணியிடம் கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் ஜான்சிராணி தனது உறவினர்களுடன் சம்பவ இடம் சென்று பார்த்தபோது பேச்சு மூச்சின்றி தரையில் மயங்கிய நிலையில் நந்தகுமார் கிடந்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் உதவியுடன் நந்தகுமாரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு நந்த குமாரின் உடலை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நந்தகுமாரை அழைத்துச் சென்ற நண்பர்கள் தான் அவரை அடித்துக் கொன்று விட்டதாக பெற்றோர் புகாரையடுத்து நந்த குமாரின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் போலீசார், நந்தகுமாரின் நண்பர்கள் விஜய் மற்றும் சுதாகர் இருவரிடமும் காமநாயக்கன் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. விஜய் மற்றும் சுதாகர் இருவரும் தங்கள் செலவுக்காக அவ்வப்போது நந்தகுமாரிடம் கடன் வாங்கியுள்ளனர் மொத்தமாக 600 ரூபாய் கடன் பெற்று இருந்த நிலையில் நந்தகுமார் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இருவரும் பிறகு தருவதாக தெரிவித்திருந்த நிலையில் சம்பவ தினத்தன்று நந்தகுமார் 600 ரூபாய் பணத்தை தற்பொழுது தரவேண்டும் என தெரிவித்துள்ளார் இதில் மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் விஜய் மற்றும் சுதாகர் இருவரும் சேர்ந்து நந்தகுமார் தாக்கியுள்ளனர் இதில் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொலைப்பழி தங்கள் மீது விழக் கூடாது என நந்தகுமாரின் தாயாருக்கு போன் செய்து நந்தகுமார் மயங்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.