திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு 2 மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரியில் இருந்து மத்திய அரசின் *ஃபிட் இந்தியா* திட்டத்தின் கீழ் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை வழங்கினார். தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குனசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார்கள்.
அவர் பேசுகையில் காலங்கள் மாற மாற மனிதனின் வசதியும், மனநிலையும் மாறி வருகிறது. ஒவ்வொருவரும் தன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும், தினந்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும், யோகா செய்ய வேண்டும் அவ்வாறு பின்பற்றினால் மனிதன் உடல் நன்றாக இருக்கும் என்றார். சைக்கிளில் செல்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைய சூழலில் இளைஞர்கள் பக்கத்து வீதிக்கு செல்வதற்கு கூட இருசக்கர வாகனத்தில் தான் செல்கிறார்கள். மிதிவண்டியை மறந்து விட்டார்கள். ஆகையால் தன் உடலை பேணிக்காக்க மிதிவண்டியினை பயன்படுத்துங்கள் என்றார்.
மேலும் நடைபயிற்சியிலும் ஈடு படவேண்டும் என்றார். மாணவ செயலர் சந்தோஷ் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி கல்லூரியில் துவங்கி புஷ்பா தியோட்டர் வழியாக டவுன் ஹால், எம்..ஜி.ஆர் சிலை, பார்க் ரோடு, நஞ்சப்பா பள்ளி, ரயில் நிலையம், புஷ்பா தியோட்டர் வழியாக மீண்டும் கல்லூரியை அடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தை வழியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷம் போட்டும் சென்றனர். பேரணியை துவக்கி வைத்தது மட்டுமல்லாமல் பேரணியில் மாணவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், வடக்கு காவல் உதவி ஆணையர் வெற்றிவேந்தன்,காவல் ஆய்வாளர் கணேஷ், ஆகியோர் சைக்கிள் ஓட்டி வந்ததை அனைவரும் ஆர்வத்தோடு பார்த்தனர். நிகழ்ச்சியில் சடையப்பன், ஆண்டவர் பழனிச்சாமி, தம்பி சண்முகசுந்தரம் மற்றும் ஏராளாமான காவல் துறையினரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் தீபா செய்திருந்தார்.
Tags:
தமிழகம்