அமமுக மாநில நிர்வாகி கடம்பூர் மாணிக்கராஜா மீது சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

அமமுக மாநில நிர்வாகி கடம்பூர் மாணிக்கராஜா மீது சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

 


 

கயத்தாறு ஒன்றியம் பன்னீர்குளம் பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் அருந்ததியர் வேட்பாளர்களை அவதூறாக பேசியதாக அமமுக மாநில நிர்வாகி மாணிக்கராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா. இவர், அமமுக தேர்தல் பிரிவு செயலாளராகவும், தென் மண்டல பொறுப்பாளராகவும் உள்ளார். இவர் கடந்த 26ம் தேதி கயத்தாறு ஒன்றியம் பன்னீர்குளம் பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, சாதி ரீதியாகவும், பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 

 

இதுகுறித்து கடந்த வாரம் , மாணிக்கராஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்டச் செயலாளர் காயல் முருகேசன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் அருந்ததி அரசு, மாவட்டத் தலைவர் சந்தனம், மாவட்ட துணைச்செயலாளர் மகேஷ், மாநகர செயலாளர் காளிமுத்து, மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆதிக் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்திற்கு திரண்டு வந்து புகார் மனு அளித்தனர். 

 

அம் மனுவில் "கயத்தாறு ஒன்றியம் பன்னீர்குளம் பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அமமுக தேர்தல் பிரிவு செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா, பட்டியல் இனத்தை சேர்ந்த அருந்ததியர் வேட்பாளர்களை தரக்குறைவாக ஒருமையில் சாதிய வன்முத்துடன் பேசியுள்ளார்.அதற்கான ஆதார வீடியோ உள்ளது. அவரது பேச்சு அருந்ததியர் சமூக மக்களுக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சு சாதிய மோதலை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. தென்மாவட்டத்தில் அமைதி தொடர்ந்திட கடம்பூர் மாணிக்கராஜா மீது தீண்டாமை கொடுமை சட்டத்திலும், தேர்தல் விதிமுறை மீறல் விதிகளின்படியும் வழக்குபதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்" என மனுவில் வலியுறுத்தினர்.

 

இந்நிலையில் காமநாயக்கன்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த செந்தூர் பாண்டியன் மனைவி பொன்னுலட்சுமி (24) என்பவர் கயத்தார் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின் பேரில் மாணிக்கராஜா மீது 153ஏ, சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பெண்களை இழிவுபடுத்துதல்,  உட்பட 3பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

Previous Post Next Post