தூத்துக்குடி தாளமுத்துநகர், மாதா நகரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய வீட்டில் நேற்று திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது. அப்போது அவரது வீட்டருகே பார் ரவியின் (திமுக 12வது வார்டு கிளைச் செயலாளர்) உதவியாளரான பார்த்தசாரதியின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை செல்வம் படமெடுத்து டிக்டாக்கில் பதிவு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நிச்சயதார்த்த விழா முடிந்த பின்னர் இரவு 1 மணியளவில் செல்வம் அவரது உறவினர் முத்துக்குமார், முத்துச்செல்வம் ஆகியோர் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் செல்வத்தையும் முத்துக்குமார் மற்றும் முத்துச்செல்வம் ஆகிய மூவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மூன்று பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலை தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
கொலை தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ரவி என்கிற பார் ரவி, பார்த்தசாரதி அவரது அண்ணன் இசக்கிமுத்து, மற்றும் கதிர் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பார்த்தசாரதியும், இசக்கி முத்துவும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
அப்பகுதியிலுள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் பார் ரவி தர்மகர்த்தாவாக உள்ளார். இவரது நிர்வாகத்திற்கு ரவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கணக்கு வழக்கு சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இது இவர்களுக்குள் பகையை ஏற்படுத்தியதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகின்றது
கொலையான செல்வத்தின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் செல்வம் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை உடனே கைது செய்யக்கோரி கொலையான இளைஞரின் உறவினர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவமணை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் ,
அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கொலையில் தொடர்புடைய மேலும் இருவரை பார் ரவி, மற்றும் கதிர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதை தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்,
கொலை சம்பவத்தில் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷ்ணன் , தலைமையிலான போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன் பாராட்டினார். மேற்கண்ட சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது