பொங்கல் பரிசா 1000 ரூபாய் கொடுத்தீங்க! ஆனா இதை மறந்துட்டீங்களே எடப்பாடி சார்...

 


தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் இடம்பெறாதது வேதனை தருகிறது, அடுத்தாண்டு பொங்கல் பரிசில் வெல்லத்திற்கும் தனி இடம் வேண்டும் என வெல்லம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


 பரமத்திவேலூர் சுற்று வட்டாரப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் அச்சு மற்றும் உருண்டை வெல்லம் பிலிக்கல்பாளையத்தில் உள்ள 13  வெல்ல மண்டிகளுக்கு எடுத்து வரப்படுகிறது.


அங்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஏலம் நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலம் எடுப்பார்கள் அவற்றை லாரிகள் மூலம் தமிழகம்,கர்நாடக,ஆந்திரா,கேரளா,மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.


இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூர் பிலிக்கல்பாளையத்தில் வெல்ல உற்பத்தி சற்று சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


வெல்லம் மூட்டை ஒன்றிற்கு (30கிலோ)  1250 முதல் 1300 ரூபாய் வரையிலும் விலைப்போகிறது. 
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சபரிமலை ஐயப்பன் கோவிலின் அரவனை தயாரிப்பிற்கு தமிழகத்தில் பரமத்திவேலூர் பிலிக்கல்பாளையத்திலிருந்து தான் வெல்லம் டெண்டர் கொடுக்கப்பட்டது.


அதன்படி தயாரிப்பு மற்றும் விற்பனையும் உயர்ந்தது. ஆனால் காலப்போக்கில் டெண்டர் முடிவில் சபரிமலை அரவனை தயாரிப்பிற்கு வெல்லம் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசில் வெல்லமும் இடம்பெற்றிருந்தது. அதன்காரணமாக பொங்கல் பரிசிற்கு வைக்கப்பட்டிருந்த வெல்லமும் பிலிக்கல்பாளையத்திலிருந்து சென்றது. அப்போது மூட்டை ஒன்றிற்கு 1500 வரை விலை போனது. ஆனால் தற்போது அந்த நிலை தலைகீழாக மாறி பொங்கல் பண்டிகையின் போதும் மூட்டை ஒன்றிற்கு 1250 முதல் 1300 வரை மட்டுமே வெல்லம் விற்கப்படுகிறது.


எனவே அடுத்தாண்டாவது தமிழக அரசு பொங்கல் பரிசு பொருட்களில் மீண்டும் வெல்லத்தினை சேர்க்க வேண்டும் என வெல்லம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை. 


பொங்கல் பண்டிகை தமிழர்களின் பராம்பரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நம் தமிழர்களின் மரபு படி பொங்கல் வைக்க சர்க்கரையை பயன்படுத்தாமல் வெல்லத்தை பயன்படுத்தினால் வைக்கும் பொங்கலை போன்று வெல்லம் தயாரிப்பவர்களின் வாழ்க்கையும் இனிமையாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.


Previous Post Next Post