பனி மூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்: நம்ம ராணிப்பேட்டையில்தான் இப்படி ஒரு சம்பவம்

நெடுஞ்சாலையில் பனி மூட்டத்தால் 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்


விபத்தில் சிக்கிய வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி நின்றதால் பதினைந்திற்க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்


வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சாலைகளில் காலை 9 மணி வரையிலும் வாகனங்கள் முகப்பு விளக்கை எறியவிட்டு செல்கின்றன.


பனி மூட்டம் கடுமையாக இருந்தாலும் வாகனங்களின் வேகம் குறையவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் இயக்கப்படுகின்றன. கடும்பனி வாகனங்களின் அதிக வேகத்தால் இன்று சென்னை நோக்கி சென்ற 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதின.


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அம்மனந்தாங்கல் மேம்பாலத்தில் இன்று காலை மினிலாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மினிலாரி மேம்பால தடுப்புச்சுவரில் மோதியது.


இதனையடுத்து அதனை நிறுத்தி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த 2 லாரிகள் அந்த மினி லாரி மீது மோதியது.


அதனை தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்று விபத்தில் சிக்கியிருந்த லாரிகள் மீது மோதி நின்றது. அந்த நேரத்தில் சென்னை நோக்கி 6 கார்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. அதில் முன்னால் வந்த கார் பனி மூட்டத்தால் லாரியை கவனிக்காமல் கண்டெய்னர் லாரி மீது மோதியது.


அதன் பின்னால் வந்த 5 கார்களும் அடுத்தடுத்து மோதின. ஒரு சில நிமிடங்களில் இந்த விபத்து நடந்து முடிந்துவிட்டது 6 கார்களின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. அதில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்து வலியால் கூச்சலிட்டனர்.


நெடுஞ்சாலையில் வந்த மற்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்றன. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாலாஜா போலீசார் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


அந்த நேரத்தில் சென்னையில் இருந்து வாணியம்பாடி வந்து கொண்டிருந்த அமைச்சர் நிலோபர் கபில் காரை நிறுத்தி மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். அவருடன் அவருடைய நேர்முக உதவியாளர் பிரகாசம் ,பாதுகாப்பு அதிகாரி ராஜா மாணிக்கம், சுமையா மற்றும் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் உட்பட அனைவரும் காயமடைந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..


விபத்தில் ஆற்காடு, திமிரியை சேர்ந்த மகாலிங்கம் (வயது 46) வெட்டுவானத்தை சேர்ந்த பாலு (23), சேலத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (36), குடியாத்தத்தை சேர்ந்த சதீஷ் (28), முத்து (32), கோவையை சேர்ந்த சதீஷ் பாபு (42), வாணியம்பாடி முல்லை கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (28), ஆற்காட்டை சேர்ந்த யுவராஜ் (32), விஜயகுமார் (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்றும் சிலர் லேசான காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் விபத்தில் வேலூரில் இருந்து சென்னை விமான நிலையம் நோக்கி சென்ற பங்களாதேஷ் தம்பதி சிக்கினர். விமானத்தில் செல்ல வேகமாக செல்ல வேண்டும் என அவர்கள் உதவி கேட்டனர். அமைச்சர் நிலோபர் கபில் அங்கிருந்தவர்கள் உதவியுடன் வேறு கார் வரவழைத்து பங்களாதேஷ் தம்பதியை சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.


இந்த விபத்தால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Previous Post Next Post