அதன் பிறகு ஏனோ அரசியலிலிருந்து ஒதுங்கி சென்று கொண்டிருந்தார். அரசியலுக்கு வருவேன், ஆனால் எப்போது என்று சொல்ல முடியாது என்கிற ரீதியில் கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதாக அதிரடியாக அறிவித்தார்கள்.
கமலஹாசன், மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை ராமேஸ்வரத்தில் துவங்கி நடத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரும் இன்னும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை உறுதி செய்த பின்னரும், களத்திற்கு வராமல் இருந்தார். இதனால் இவர் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.
நிலைமை இப்படியே சென்று கொண்டிருக்கும் நிலையில் தான், துக்ளக் விழாவில் ரஜினி ஒரு கருத்து தெரிவித்தார். சேலத்தில் நடந்த ஊர்வலத்தை பற்றியும், பெரியார் பற்றியும் சொன்ன அவரது கருத்து பற்றிக்கொண்டது. சாதாரணமாக அல்ல தமிழ்நாட்டின் திராவிட கட்சிகளின் 'ஐகான்' பெரியாரைப் பற்றியும் திராவிடம் பற்றியும் பேசியுள்ளார்.
கிட்டத்தட்ட கடந்த மாதம் முழுக்க செய்தி சேனல்களின் டிரெண்ட் ஆகி இருந்த சி .ஏ. ஏ., வை ஓரம்கட்டி, இந்தக் கருத்துக் கூறியதன் மூலம் ரஜினி ட்ரெண்டாகி இருக்கிறார். தமிழகம் முழுவதும் ரஜினிக்கு எதிராக திராவிட கட்சிகள் போர்க்கொடி தூக்கின.
இந்த நிலையில் நேற்று கருத்து தெரிவித்த ரஜினி தனது கருத்தில் மாற்றமில்லை. தான் மன்னிப்புக் கேட்கப் போவதுமில்லை என்று ஆணித்தரமாக தெரிவித்தார். மேலும் அவர் நடந்த சம்பவத்தை தான் கூறியதாகவும், இல்லாத ஒன்றை கூறவில்லை என்றும் கூறி, அரசியல் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றி இன்னும் கொஞ்சம் கொழுந்துவிட்டு எரிய செய்துள்ளார்.
பாஜக, ஆர்எஸ்எஸ் சார்ந்த பத்திரிகையான, துக்ளக் விழாவில் அவர் பேசிய பேச்சுக்கும், அவரது இப்போதைய நிலைப்பாட்டுக்கும் பாஜக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
ஆக, இந்த முறை கையில் எடுத்திருக்கும் ரஜினியின் ஆயுதம் இந்துத்துவம் என்பது அரசியல் குழந்தைகளுக்கே புரியும். ரஜினி ஒரு ஆன்மீகவாதி தான், ஆனாலும் அவர் அளித்த பேட்டிகளில் இதற்கு முன்பு கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் ஆகவே இருந்து வந்துள்ளார்.
இப்போது என்ன திடீரென்று தனது கருத்தை வெளிப்படுத்துகிறார் ரஜினி? என்ற சந்தேகம் அரசியல் நோக்கர்களுக்கும், விமர்சகர்களுக்கும் எழுந்துள்ளது.
சில அரசியல் விமர்சகர்கள், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைமையை அறிவிக்காமல் இருப்பதற்கும், ரஜினியின் இந்த அரசியல் அரசல் புரசல் கருத்துக்களுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
பாஜக ரஜினியை மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு கொண்டு சேர்க்க முடியும் என்பதை அறிய பல்ஸ் பார்ப்பதாக கூறுகின்றனர். ஒருவேளை மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தால், இதன் மூலம் ரஜினியை பாஜக மாநில தலைவராக்கி, தமிழகத்தில் பாஜகவுக்கு என்று ஆணித்தரமான ஒரு இடத்தை உருவாக்க அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வட மாநிலங்களில் நன்றாக கால் ஊன்றிஉள்ள போதும், தமிழகத்தில் பாஜகவுக்கு எப்போதும் கடும் எதிர்ப்பு உண்டு. ஆனால் கடந்து 2016இல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த கட்சி இருக்கிறது என்று மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.
தற்போது ரஜினி போன்ற ஒரு பிரபலத்தை தலைவராக்கி கட்சிக்கு அசுர வளர்ச்சி ஏற்படுத்திவிட முடியும் என்று அந்தக் கட்சியின் உயர்மட்டக்குழு கருதுவதாக கருத்து தெரிவிக்கிறார்கள்.
ஆனால் மற்றொரு தரப்பு அரசியல் நோக்கர்கள், ' ரஜினியை நேரடியாக பாஜக தலைவர் ஆக்காமல், பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை சொல்ல செய்து பாஜகவின் கொள்கைகளை பரப்புவதற்கு ரஜினியின் பிரபல தன்மையை பயன்படுத்திக்கொள்ள அந்தக் கட்சி நினைக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.
அப்படி ஒருவேளை ரஜினி பாஜக தலைவர் ஆனாலும் சரி, பாஜக ஆதரவு கருத்துக்களை எடுத்துச் சென்றாலும் சரி தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளும், ஆதரவும் அவருக்கு வரும். இவற்றை சமாளித்து விடுவாரா என்பது அரசியல்வாதிகளின் சந்தேகம்.
ரஜினி ரசிகர்களும், ரஜினி என்ன செய்தாலும் சரியாகத்தான் செய்வார் என்ற ரீதியில் மொத்தத்தில் அவர் அரசியல் களத்திற்கு வந்தாலே போதும் மாபெரும் வெற்றி அவரைச் சேரும் பின்னர் அவர் தான் அடுத்த முதல்வர் என்ற ரீதியில் கருத்து தெரிவிக்கிறார்கள்.
திராவிட கட்சியினரோ, ரஜினியின் பாஜக ஆதரவு போக்கு நிச்சயமாக அவருக்கு அரசியல் களத்தில் மாபெரும் எதிர்ப்பைத் தான் உருவாக்கும் மக்கள் செல்வாக்கு கிடைக்காது என்கின்றனர்.
ஆனாலும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினியின் கருத்து தீயாய் பரவுகிறது. ரஜினி பாஜக தலைவராக வருவாரா? இந்துத்துவ ஆதரவு அரசியல் கட்சி ஒன்றை துவக்கி நடத்துவாரா? அல்லது அவரது கருத்துக்களை வாபஸ் பெற்றுக்கொண்டு திராவிட மற்றும் இடதுசாரி ஆதரவுகளை தெரிவித்து போல கட்சி நடத்துவாரா?
ரஜினியின் இப்போதைய கருத்துக்கள் 2021 வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு களம் அமைப்பதற்கான முன்னோட்டமா? என்பதெல்லாம் இனி விரைவில் தெரியவரும் என்பது மட்டும் உண்மை.
- தமிழ் அஞ்சல் செய்தி பிரிவு
tamilanjalweb@gmail.com