மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மாவால் முன்மொழியப்பட்ட மார்கழி மாதம்
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கிருஷ்ண பரமாத்மாவால் முன் மொழியப் பட்ட மாதம் மார்கழி. வாழ்வின் சின்னச் சின்னச் செயல்களிலும் கடவுளைச் சென்றடைவதற்கான வழியும் இணைந்தே இருக்கிறது என்பதை மார்கழி மாதம் உணர்த்திவிடும்.
மார்கழியின் மகத்துவம்
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. அந்த மாதத்தில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறெந்த நிகழ்வுகளையும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் வழியொட்டியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் ஒன்ற வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
மார்கழி கோலங்கள்
அதிகாலையில் எழுந்து நீராடி, வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது. மாட்டுச்சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபடுவதும் நடக்கும். மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டுவார்கள். வரட்டிகளாக தட்டியதை சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.
உடலுக்கு புத்துணர்ச்சி
மார்கழியில் அதிகாலை துயிலெழுவதும், வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் நல்லவண்ணமாய் இருக்கும். அதிகாலையில் வெளியே வருவதால் அந்தக் காற்றும், கதிரும் உடலை வன்மைப்படுத்தும்.
சிவனுக்கு ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரையும் வருகிறது. சிவ பெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம்.
வைகுண்ட ஏகாதசி
அனுமன் ஜெயந்தி வருவதும் வைகுண்ட ஏகாதசி வருவதும் கூட மார்கழியிலுதான். அவ்வளவு ஏன்? கேதுவின் ஆதிக்கம் பெற்ற புனிதர் ஏசுபிரான் பிறந்ததும் மார்கழியில்தான். இவ்வளவு சிறப்புவாய்ந்த மார்கழியில் விடியற்காலம் விஷ்ணுசகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை 30 பாடல்களையும் படித்துவந்தால் வரும் புத்தாண்டு மற்றும் பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்குமென்பதில் துளியும் சந்தேகமில்லை.