போர்வை, துண்டுகளை விற்க தனிப் பேருந்து - அசத்தும் சென்னிமலை கைத்தறி கூட்டுறவுச் சங்கம்
நினைத்த ஒரு பொருளை வாங்குவதற்கு அலைந்து திரிந்து கால்கடுக்கப் பயணித்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இன்றைக்கு மொபைல் மூலமாக ஒரே `கிளிக்'கில் நினைக்கும் பொருள்களை வீடு தேடி வர வைத்துவிட முடியும். அந்த அளவுக்கு ஆன்லைன் ஷாப்பிங் சைட்டுகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இப்படியான ஆன்லைன் உலகிலும், தங்களுடைய பொருள்களைச் சந்தைப்படுத்த மக்களிடம் விதவிதமான அணுகுமுறைகளைக் கையாள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார். அந்தவகையில், ஈரோட்டைச் சேர்ந்த ஒரு கைத்தறி கூட்டுறவுச் சங்கமானது, தனி ஒரு பேருந்து மூலமாக கைத்தறியிலான பொருள்களை ஏற்றிக்கொண்டு மக்கள் மத்தியில் வலம் வந்து அசர வைக்கிறது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் செயல்பட்டு வரும் `சென்குமார் தொடக்கக் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கம்' தான் இப்படியான முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறது.
கைத்தறிப் போர்வைகள் மற்றும் துண்டுகளுக்குப் பெயர் பெற்ற சென்னிமலையில், கிட்டத்தட்ட 35 நெசவாளர்கள் சங்கங்கள் இருக்கின்றன. அதில், பிரதானமாக இந்த சென்குமார் தொடக்க கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கம் இருக்கிறது. இச்சங்கத்தின் மூலமாகத் தயார் செய்யப்படும் போர்வைகள், துண்டுகள், மெத்தை விரிப்புகள், தலையணை உறை போன்றவை கோ-ஆப்டெக்ஸிற்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இச்சங்கமானது இதற்கு முன்பே வேனில், கைத்தறியினால் செய்யப்பட்ட பொருள்களை ஏற்றிக்கொண்டு மக்கள் மத்தியில் வியாபாரம் செய்து வந்திருக்கிறது. இச்சங்கத்தின் செயல்பாடுகளைப் பார்த்து தமிழகக் கைத்தறி மற்றும் துணிநூல் துறையானது, சமீபத்தில் ரூ.32 லட்ச மதிப்பிலான பேருந்தினைக் கொடுத்திருக்கிறது. தமிழக அரசின் புதுமை முயற்சிகள் ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பேருந்தின் மூலமாக, கைத்தறியிலான பொருள்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க இருக்கின்றனர்.
இதுகுறித்து சென்குமார் தொடக்க கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ்.மணியிடம் பேசினோம். ``1971-ல் 800 உறுப்பினர்களுடன் இந்தச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைக்கு சுமார் இரண்டாயிரம் பேர் இச்சங்கத்தில் இருக்கின்றனர். முழுக்க முழுக்க கைத்தறியால் போர்வைகள், துண்டுகள், மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள், சால்வைகள் போன்றவற்றை செய்து வருகிறோம். கைத்தறியினால் செய்யப்பட்ட பொருள்களுக்கு மக்களிடம் சுமாரான வரவேற்புதான் இருக்கிறது. பேருந்தினுள் வைக்கப்பட்டிருக்கும் கைத்தறிப் பொருள்கள்
விசைத்தறி மற்றும் இயந்திரங்களால் கைத்தறி நெசவாளர்களின் எதிர்கால வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது. இதற்கிடையே, மக்களிடம் சென்று கைத்தறிப் பொருள்கள் குறித்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு எங்களுடைய சங்கத்திற்குப் பேருந்து வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
தொடர்ந்தவர், ஆல் இந்தியா பர்மிட் பெற்றிருக்கும் இந்தப் பேருந்தின் மூலமாக, நாட்டின் அனைத்து இடங்களுக்கும் கைத்தறிப் பொருள்களைக் கொண்டுசேர்க்க இருக்கிறோம். மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் இந்தப் பேருந்து நிறுத்தப்படும். பேருந்தினுள் கைத்தறியிலான பொருள்கள் தனித்தனியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.. பேருந்தினுள் நடைபெறும் விற்பனை இதை மக்கள் ஒரு கண்காட்சி போலப் பார்வையிட்டு, தேவைப்படும் பொருள்களை வாங்கிச் செல்லலாம். ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் கைத்தறி நெசவுத் தொழிலை நம்பி சுமார் 20,000 பேர் இருக்கின்றனர். மக்கள் கைத்தறியிலான பொருள்களுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் மட்டுமே, எதிர்காலத்தில் இந்த மக்களையும், கைத்தறித் தொழிலையும் காப்பாற்ற முடியும்" என்றார்.