கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது
கோவில்பட்டி சொர்ண மலை கதிர்வேல் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை முன்னிட்டு மகாதீபம் ஏற்கப்பட்டது. திருக்கார்த்திகை முன்னிட்டு கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் நேற்று மாலை 6 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் முன் மண்டபத்தில் உள்ள 23 கிலோ வெண்கல சட்டியில் சுமார் 100 கிலோ நெய் ஊற்றி கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பூஜைகளை சுப்பிரமணிய பட்டர், ஹரிபட்டர் அரவிந்த் பட்டர் ஆகியோர் செய்தனர்.
விழாவில் கட்டளைதாரர் நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச் செல்வம், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு முருகன் வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைப்போல் கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதர் சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு திருவனந்தல், 5 மணிக்கு விளா பூஜை ஆகியவை நடந்தன. 5.30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. காலை 11 மணிக்கு முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
மாலை 7 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் ரோஷினி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.