ஆலங்குளம் நல்லூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.1கோடி வைப்பு நிதியை மோசடி செய்த உதவி செயலாளர் கைது
ஆலங்குளம் நல்லூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வைப்பு நிதி ரூ 1 கோடியை மோசடி செய்த உதவி செயலாளர் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் சொர்ண ராஜ். இவர் ஆலங்குளம் நல்லூரில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உதவி செயலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2016 -2018 வரை உள்ள காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் வங்கியில் செலுத்திய வைப்புநிதியில் போலியாக ஆவணங்கள் தயாரித்து வாடிக்கையாளர்கள் பெயரில் கடன் பெற்றுள்ளார். இதில் ரூ 98 லட்சத்து 54 ஆயிரம் வரை மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே சொர்ணராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். இந்த மோசடி தொடர்பாக தென்காசி கூட்டுறவு துணை பதிவாளர் முத்துசாமி சென்னையில் உள்ள வணிக குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பி. விமலாவிடம் புகார் மனு அளித்தார். இவரது அறிவுரையின் பேரில் நெல்லை வணிக குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி. தர்மலிங்கம், இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுடலைக் கண்ணு, ஸ்ரீரங்க பெருமாள், ராஜாராம், ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இன்று வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தற்போது பாளை புதுப்பேட்டை தெருவில் வசித்து வந்த சொர்ணராஜை பாளை பேருந்து நிலையம் அருகில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய பிறகு நெல்லை நீதிமன்றம் J.M. - 2-ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.