குடியுரிமை திருத்த சட்டம்: மத்திய, மாநில அரசுகளை, அதற்கு கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .
குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்த மத்திய அரசையும், அதற்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க அரசையும் கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெரு சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்,
அவர் பேசுகையில் "குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதசார்ப்பின்மை, சமஉரிமை, உள்ளிட்ட அனைத்தையும் தகர்த்துள்ளது. இதற்கு தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு துணை நின்று சிறுபான்மையினர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது. மத்திய பா.ஜ.க. அரசின் சிறுபான்மையினர் விரோத – தமிழர் விரோத செயல்கள் அனைத்திற்கும் தமிழின விரோத அ.தி.மு.க. அரசு பல்லக்கு தூக்குகிறது" என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவடட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயகுமார் ரூபன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், வழக்கறிஞர் பிரிவு மோகன்தாஸ் சாமுவேல், உட்பட திமுக நிர்வாகிகள் , தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.