கோவில்பட்டியில் மரக் கன்றுகள் பராமரிப்பு செய்த பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி மற்றும் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளில் 50 மரக்கன்றுகள் நடும் திட்டம் முடிவடைந்த நிலையில், தேசிய பசுமைப்படை சார்பில், அந்த மரக்கன்றுகளுக்கு பராமரிப்பு நிதியும் மற்றும் பராமரிப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டது. கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலை பள்ளியில் வைத்து நடந்த விழாவிற்கு, மாவட்ட கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பவனந்தீஸ்வரன் முன்னிலை வகித்தார்.
தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி தலைமையாசிரியர் சுப்பாராயன் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் மற்றும் முன்னாள் ரோட்டரி துணை ஆளுனர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார 30 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களிடம், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மரக்கன்றுகள் பராமரிப்பு நிதி மற்றும் பராமரிப்பு உபகரணங்களை வழங்கினர். விஜயாபுரி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் சசிகுமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.