உரிய ஆவணங்களை செலுத்தி ஜி.எஸ்.டி ரீபண்டை பெறுங்கள் திருப்பூர் சாய உரிமையாளர் சங்கம் அறிக்கை 

உரிய ஆவணங்களை செலுத்தி ஜி.எஸ்.டி ரீபண்டை பெறுங்கள் என்று திருப்பூர் சாய உரிமையாளர் சங்க தலைவர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :


உலகின் முதலாவது பூஜ்ய நிலை  திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்து வரும் திருப்பூர்  சாய ஆலைகளுக்கான பொது சுத்திகரிப்பு நிலையங்கள் சேவை வரி விதிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டன. ஆனால் 1.7.2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரி [ஜி.எஸ்.டி] அமுலுக்கு வந்த பின் பொது சுத்திகரிப்பு நிலையங்களும் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டன. இதனால் பொது சுத்திகரிப்பு நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர் சாய ஆலைகள் 12% வரி கட்ட வேண்டியதாயிற்று. இந்த ஜி.எஸ்.டி வரியை திரும்பப் பெற முடியாததாகையால், மேற்படி சாய ஆலைகள் நிதிச்சுமைக்கு ஆளாயின. மேலும்  ஜி.எஸ்.டி வரியை திரும்பப் பெறுவதிலும் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியதிருந்தது. இந்த சூழ்நிலையில், மாநில அரசின் வணிக வரித்துறை அலுவலகங்களில் தணிக்கை செய்த அக்கவுண்டென்ட் ஜெனரல் அலுவலக அதிகாரிகள் எழுதிய தணிக்கை குறிப்புரையின் பேரில் சாய ஆலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த  ஜி.எஸ்.டி ரீபண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இது சம்பந்தமாக சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் வணிக வரித்துறை ஆணையரிடம் முறையீடு செய்தது. சங்கத்தின் கோரிக்கையை பரிசீலித்து, அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, சாய ஆலைகளுக்கான  ஜி.எஸ்.டி ரீபண்டை தொடர்ந்து வழங்கலாம் என ஆணையர்  உத்தரவு பிறப்பித்துள்ளார் என தெரிய வருகிறது. எனவே நிலுவையிலுள்ள ரீபண்டு விண்ணப்பங்களை அந்தந்த வணிக வரித்துறை அலுவலகங்களில் சமர்ப்பித்து உரிய  ஜி.எஸ்.டி  ரீபண்டை பெறுமாறு சங்க உறுப்பினர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


 


 


Previous Post Next Post