அண்ணா பிறந்த நாளில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்ய கூடாது வழக்கறிஞர் சீர்காழி ரா.ராஜதுரை முதல் அமைச்சருக்கு கோரிக்கை


தமிழ்நாட்டில் தினந்தோறும் கொலைகள் நடக்கின்றன. பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15-ம் தேதி அன்று கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்ய கூடாது என்று வழக்கறிஞர் சீர்காழி ரா.ராஜதுரை முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:


ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இது தவறான செயலாகும். நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கொடிய கொலை குற்றவாளிகளை முன்கூட்டிய விடுதலை செய்யக் கூடாது. ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் இல்லை. ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு 7 ஆண்டு சிறை தண்டனை முடிந்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்து வருகிறது. கொலை குற்றவாளிகளும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இதனால், கொலை செய்தால் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்ற பயம், அச்ச உணர்வு யாருக்கும் இல்லாமல் போய் விட்டது. கொலை செய்தால் சில ஆண்டுகள் கழித்து அண்ணா பிறந்த நாளில் விடுதலையாகி விடலாம் என்ற எண்ணமே கொலை செய்பவர்கள் மற்றும் கூலிப்படைகளுக்கு உள்ளது. நமது தமிழ்நாட்டில் தினந்தோறும் குறைந்தபட்சம் 5 கொலைகள் நடக்கிறது. இந்த கொலை செய்தியை விவரமாக ஒளிப்பரப்ப தனியார் டி.விக்களில் க்ரைம் டைரி, க்ரைம் கார்னர், குற்ற சரித்திரம், குற்றம் குற்றமே என்று பல தலைப்புகளில் அன்றாடம் அரை மணி நேரம் நிகழ்ச்சிகள் வருகிறது. தமிழகத்தில் நடக்கும் கொடூரமான கொலைகளை தினந்தோறும் டி.விக்களில் பார்க்க முடிகிறது. தினந்தோறும் கொலை நடப்பதற்கு சிறந்த உதாரணம் இந்த டி.வி நிகழ்ச்சிகள் தான். ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்ட கொலை குற்றவாளிகளை எக்காரணம் கொண்டும் முன்கூட்டிய விடுதலை செய்ய கூடாது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு கருணை காட்ட கூடாது. ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவித்த ஆக வேண்டும். வரும் செப்டம்பர் 15-ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கொடிய கொலை குற்றவாளிகளை நன்னடத்தையை காரணம் காட்டி முன் கூட்டியே விடுதலை செய்யக் கூடாது என்று தயவு செய்து தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார். 


 


 


Previous Post Next Post