தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் - தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.
நடிகர் சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் நேற்று வெளியானதை முன்னிட்டு தூத்துக்குடி சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் ஹெல்மட் இல்லாத 100 பேருக்கு இலவச ஹெல்மட் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே நடைபெற்றது.
விழாவிற்கு தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தலைமை தாங்கி இரு சக்கர வாகனஓட்டிகளுக்கு இலவச ஹெல்மட்களை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவர் ஸ்மைலின் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் 70 ஆண்கள், 30 பெண்களுக்கு இலவச ஹெல்மட்கள் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் :-
இது போன்ற விழிப்புணர்வு சேவைகளை மற்ற ரசிகர் மன்ற அமைப்புகளும் செய்ய முன்வர வேண்டும். நமது மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன் பதவியேற்ற பிறகு மாவட்ட காவல்துறையில் பொதுமக்களின் நலனுக்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
3 தெருக்களுக்கு 1 காவலர், என்ற திட்டம் மூலம் அந்த காவலர் 3 தெருக்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ஆலோசனையின்படி குற்ற தடுப்பு செயல்கள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு உதவி செய்வார்.
காவலன் செயலி மூலம் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகள்,ஆலோசனைகளை தெரிவிக்கலாம். திருடு போன பைக்குகளை மீட்க டிராக்கிங்சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும். பைக்கில் செல்கையில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்ட கூடாது. குடிபோதை, அதிவேகத்தில் பைக்கில் செல்ல கூடாது. தங்கள் கண்முன் நடக்கும் குற்ற நிகழ்வுகளை பொதுமக்கள் 100 என்ற எண்ணுக்கு தெரியபடுத்தினால் 5 நிமிடத்தில் காவலர்கள் வருவார்கள்". என அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் சிசில், துணைஆய்வாளர் வெங்கடேஷ், மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்இன்ஸ்பெக்டர் ஊர்காவல் பெருமாள் உட்பட சூர்யா ரசிகர்கள் , பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.