தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அவதூறாக பேசி வருவதாகவும், அவரை கண்டித்தும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளர் கேசவன் தலைமையில் காந்தி மண்டபத்திலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டித்து கோஷங்கள் முழங்கியவாறு காங்கிரஸ் கட்சியினர் பயணியர் விடுதி முன்பு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென அமைச்சரின் உருவப் படங்களை தீ வைத்து எரித்தனர். மேலும் உருவப் படங்களை செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த மேற்கு காவல் உதவி ஆய்வாளர்கள் ஆர்தர் ஜஸ்டின், அரிகண்ணன் தலைமையிலான போலீஸார் அவர்களிடமிருந்து உருவப்படங்களை பறிமுதல் செய்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, வழக்கறிஞர் மகேஷ் குமார், நகர தலைவர் சண்முகராஜ், பொதுச் செயலாளர் முத்து, மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் மாரிமுத்து, வர்த்தக பிரிவு நிர்வாகி ராஜா ,சுப்பாராயலு உள்ளிட்ட 13 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.