நாடு ஆபத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது ,பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சி மெச்சக்கூடிய ஆட்சியாக இல்லை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்க்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சி மெச்சக்கூடிய ஆட்சியாக இல்லை. எந்த துறையிலும் முத்திரை பதிக்கவில்லை. வெறும் வெற்று கோஷம் வயிற்றை நிரப்பாது. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, புதிய தொழிற்சாலைகள் வேண்டும். இதனை மோடி அரசு செய்யவில்லை. பொருளாதாரத்தை பாழ்படுத்தி இருக்கிறார்கள். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் மோட்டார் வாகன துறை சரிந்து விட்டது. ரிசர்வ் வங்கி உபரி நிதி பறிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் தமிழ் தெரிந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல், தமிழ் தெரியாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறார்கள். காஷ்மீரில் எல்லோரையும் அடைத்து வைத்து இருக்கிறார்கள். இதைத்தான் அவர்கள் செய்து இருக்கிறார்கள். 50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி இந்தியாவை ஒரு துணி போன்று அழகாக பிணைத்து வைத்து இருந்தது. ஆனால் பா.ஜனதாவினர் அதனை கிழித்து விட்டனர். நாடு ஆபத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் ஆக்கப் பூர்வமான விஷயங்கள் ஏதும் செய்யவில்லை. நாட்டின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமான விஷயத்தில்தான் இருக்க வேண்டுமே தவிர தவறான விஷயங்களில் அல்ல. வெளிநாடு சென்று உள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் நலனுக்காக அதிக முதலீடுகளை ஈர்த்தார் என்றால் காங்கிரஸ் அதனை வரவேற்கும். அரசு செய்யும் நல்ல விஷயங்களை நாங்கள் விமர்சிக்க மாட்டோம். இருப்பினும் கடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்த்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கூறினார்