சம்பா விதை நெல் வாங்கி பயனடைய விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். நாகை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்தில் சம்பா நெல் விதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் விவசாயிகளுக்கு மானிய விலையில் சம்பா விதை நெல் வழங்கி பேசுகையில், கடந்த சில தினங்களாக அவ்வப்பொழுது மழை பெய்து வருவதால் , விவசாயிகளுக்கு சம்பா நேரடி விதைப்பு தாளடி உழவு மற்றும் நாற்றாங்கால் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சம்பா நெற்பயிர் சாகுபடிக்கான விதை நெல் ரகங்களான சொர்னாசப்-1, சி.ஆர்.சப்-1, கோ-50, டிகேஎம்-13 மற்றும் திருச்சி 3 ஆகியவை கொள்ளிடம் எருக்கூர், கடவாசல், முதலைமேடு ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் 50 சதவிகித மானியத்தில் வாங்கி பயன்பெறலாம். மேலும் உயிர் உரங்களான அசோப் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் நெல் நுண்ணூட்டச்சத்து ஆகியவைகளும் 50 சதவிகித மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனையும் விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என்றார். வட்டார வேளாண் அலுவலர் விவேக் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.