பழனியில் உள்ள அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால் அரசு மருத்துவமனை எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.மேலும் பழனி நகர் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு படை எடுப்பதால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது.ஆனால் அதற்கு தகுந்தார் போல் மருத்துவமனையில் ஊழியர்களும் இல்லை மருத்துவமனையின் சுற்றுப்புற சுகாதாரம் என்பது சொல்லும் அளவிற்கு இல்லை மருத்துவமனையில் உள்ள கழிப்பிடங்கள் நினைத்தாலே முகம் சுழிக்கும் அளவிற்கு காணப்படுகிறது.இப்படி மருத்துவமனையில் உள்ள அவலங்களை சொல்லிக்கொண்டே செல்லலாம் இருந்தபோதிலும் அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகளிடமும் மற்றும் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவருக்கும் நாள்தோறும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பழனி சார் ஆட்சியர் உமா அரசு மருத்துவமனையில் உள்ள அவசர வார்டு, மருத்துவர்கள் அறை, ஆண்கள் பெண்கள் ஊசி போடும் இடம், குழந்தைகள் வார்டு, காய்ச்சல் பிரிவு பகுதி, குப்பைகளை கொட்டும் இடம்,தலைக்காய சிகிச்சை பிரிவு கட்டிடம்,ஆண்கள் பொது பிரிவு,பெண்கள் பொது பிரிவு,குழந்தைகள் பிரிவு,ஹெச்ஐவி பாதிக்கப்பட்டோர் பிரிவு, இரத்த வகை சோதித்தல் பிரிவு,உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு அங்கு பணியாற்றி வரும் பணியாளர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.மேலும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தில் பார்வையிடும்போது அங்கு உள்ள குழந்தைகளின் தாய்மார்கள் சார் ஆட்சியரை முற்றுகையிட்டு இந்த கட்டிடத்தில் 20 இருக்கைகள் தான் உள்ளது.ஆனால் இங்கு இருக்கும் குழந்தைகள் எண்ணிக்கையோ 45 க்கு மேல் உள்ளது எனவே குழந்தைகள் தரையில் படுத்து கொண்டு மருத்துவம் பார்க்கின்றனர். மேலும் இங்கு உள்ள மின்விசிறிகள் பெயரளவில் மட்டுமே உள்ளது எப்பொழுதும் செயல்படுவதில்லை. கழிப்பிட அறையை நினைத்தாலே மனம் கொந்தளிக்கிறது. முறையான குடிநீர் வசதி இல்லை.சுகாதாரம் என்பது பெயரில் மட்டுமே உள்ளது. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர். இவற்றையெல்லாம் கேட்டிருந்த சார் ஆட்சியர் மருத்துவர்களை அழைத்து காரணங்களை கேட்டறிந்தார்.மேலும் தாய்மார்களிடம் நீங்கள் தெரிவித்த குறைகள் அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மாவட்ட துணைச் செயலாளர் பாவேந்தன் தலைமையில் வந்த கட்சி தொண்டர்கள் ஜெயசீலன்,லெனின், ஆகியோர் சார் ஆட்சியரை சந்தித்து அரசு மருத்துவமனையில் நிறைய குறைபாடுகள் உள்ளது ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளன இதனால் மருத்துவ சேவைகள் மிகவும் காலம் தாழ்த்தி கிடைக்கின்றது.எனவே உடனடியாக தற்காலிகமாக ஆட்களை நியமித்து மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு விரைவான மருத்துவ சேவையை ஏற்படுத்திட உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். என்று கோரிக்கை வைத்தனர்.சார் ஆட்சியர் உடனடியாக மருத்துவமனையில் தற்காலிகமாக தனிநபர் ஊழியர்களை வேலையில் சேர்ப்பதற்கான கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்து உத்தரவு வந்ததும் அதற்கான வேலை தொடங்குகிறோம்.என்று கூறினார்.மேலும் மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்க்க வரும் தாய்மார்கள் சிறு குழந்தைகளை கூட்டிக்கொண்டு வரக்கூடாது என்று அங்கு உள்ள தாய்மார்களிடம் சார் ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்வில் தலைமை உதவி மருத்துவர் உதயகுமார், மருத்துவர் கண்ணன், சித்தமருத்துவ தலைமை மருத்துவர் மகேந்திரன், உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவமனை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் பழனி சமூக நல ஆர்வலர் ரசூல் பீவி உதவி ஆட்சியரை சந்தித்து மருத்துவமனையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களை அருகில் உள்ள காப்பகங்களில் சேர்த்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்..
பழனி நிருபர்
ரியாஸ்