கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து சிறப்பு அனுமதியுடன் மணல் அள்ளப்பட்டு கொள்ளிடம் பொதுப்பணித்துறை வளாகத்தில் மூட்டைகள் கட்ட தயார் நிலையில் உள்ளன. நாகை மாவட்டம் கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தின் சார்பில் வருடந்தோறும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை ஏற்பட்டால் கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் எடுத்து வந்து மண் மூட்டைகள் தயார் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படாலம் எனவே ஆறு மற்றும் வாய்க்கால்களில் அதிக தண்ணீர் வரத்தினால் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அப்படி உடைப்பு ஏற்பட்டால் அதனை மணல் மூட்டை போட்டு நிரப்பி உடைப்பை அடைப்பதற்காக சிறப்பு அனுமதி பெற்று கொள்ளிடம் ஆற்றில் பாலுரான்படுகை என்ற இடத்தில் முதற்கட்டமாக 50 லாரிகள் மூலமாக 150 யூனிட் மணல் எடுக்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த மணல் கொள்ளிடம் பொதுப்பணித்துறை வளாகத்தில் கொட்டப்பட்டுள்ளது. உடனடியாக இந்த மண்ணைக் கொண்டு மணல் மூட்டைகள் கட்டும் பணி துவங்கவுள்ளதாகவும் உடைப்பு ஏற்படும் இடத்தில் போட்டு மணல் மூட்டைகளை போட்டு அடைக்கும் வகையில் மணல் மூட்டைகள் முன் எச்சரிக்கையாக தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.