திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் தனியார் ஹோட்டலில் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், விநாயகர் சதுர்த்தியின் போது நடைபெற்ற ஊர்வலத்தில் பின்னலாடை நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் ஆனால் கம்யூனிஸ்ட் மற்றும் திமுக போன்ற கட்சிகள் இந்து முன்னணியை குற்றம்சாட்டி வருவதாகவும் கூறினார்.
மேலும் தொழில்துறையினர் வீழ்ச்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என பல்வேறு உதாரணங்களை மேற்கோள் காட்டிய சுப்பிரமணியம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக கொடியுடன் வந்த வாகானத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தியபோது காவல்துறை சோதனையின் போது பிடிபட்ட வாகனத்தில் தீவிரவாதிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் திருப்பூரில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் சீட்டாட்ட கிளப்புகளில் அடைக்கலம் கொடுத்துவருவதாகவும் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். மேலும் இது போன்று தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீது உளவுத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.