வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை (JDGFT/ Joint Director General of Foreign Trade ) மூடுவதா?- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்!
தமிழகத்தில் மதுரையில் இருக்கும் வெளிநாட்டு வர்த்தத்துக்கான மண்டல இயக்குனர் (JDGFT/ Joint Director General of Foreign Trade ) அலுவலகத்தை சென்னை மண்டல அலுவலகத்தோடு இணைப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு மக்களவை திமுக குழுத் துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியிருக்கிறார்.
செப்டம்பர் 19 ஆம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தில், “வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல இயக்குனர் அலுவலகத்தை சென்னை மண்டல அலுவலகத்தோடு இணைக்க இருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கடிதம் தெரிவிக்கிறது.
வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மண்டல இயக்குனர் அலுவலகம் மதுரையில் இருப்பதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருக்கும் ஏராளமான தொழில்முனைவோர்களின் தேவைகளை துல்லியமாக பூர்த்தி செய்து வந்தது.
தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் தொழில் விவகாரங்களுக்காக சென்னை மண்டல அலுவலகத்துக்கு அலைய வேண்டி அவசியம் மதுரை மண்டல அலுவலகத்தால் இல்லாது போயிருந்தது. இந்த நிலையில் மதுரை மண்டல அலுவலகத்தை சென்னை மண்டல அலுவலகத்தோடு இணைக்கும் முடிவால் தென் மாவட்ட தொழில் முனைவோர்கள் குறிப்பாக எனது தொகுதியான தூத்துக்குடியில் இருக்கும் தொழில் முனைவோர் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாவார்கள். அவர்கள் ஏற்கனவே பல்வேறு இடர்களுக்கிடையில் தொழில் நடத்திவரும் நிலையில் மதுரை மண்டல அலுவலகம் சென்னைக்கு போவது அவர்களுக்கு மேலும் ஒரு இடையூறாக அமைந்துவிடும்.
தமிழ்நாட்டின் தென் பகுதி மக்களின் நீதித் தேவைகளைக் கருத்தில் கொண்டுதான் அவர்களுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் திறக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்து பல ஆண்டுகளாக மதுரையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை இயங்கி வருகிறது என்பதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
எனவே அந்த வகையில் மதுரை மண்டல வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குனர் அலுவலகத்தை மூடிவிட்டு சென்னையோடு இணைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்திடம் வேண்டுகோள் வைக்கிறேன்.
தமிழ்நாட்டின் தென் மாவட்ட தொழில் முனைவோர்களின் நலன்களையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு மதுரையில் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மண்டல இயக்குனர் அலுவலகம் தொடர்ந்து செயல்பட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கனிமொழி எம்.பி. அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.