தூத்துக்குடியில் ரசாயன ஆலை வெளியேற்றிய கழிவு நீர் ஓடையில் கலந்ததால் அதனை குடித்த மாடு பலியானது தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் ரசாயன ஆலையான V.V. டைட்டானியம் பிக்மென்ட்ஸ் ஆலையின் கழிவு நீரை குடித்ததால் மாடு உயிரிழந்ததாக புகார், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை. தூத்துக்குடி குமரெட்டியாபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சண்முகராஜ் (37). தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் நான் எருமை மாடுகளை வைத்து பால் கறந்து பிழைப்பு நடத்தி வருகிறேன், தினமும் காலை 8 மணிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மாலை 6 மணிக்கு வீட்டுக்கு அழைத்துச் செல்வேன், இந்நிலையில் இன்று (21.08.2019 ) வி.வி.டைட்டானியம் பிக்மென்ட்ஸ் ரசாயன ஆலைக்கு முன்பு உள்ள ஓடையில் கிடந்த தண்ணீரை குடித்த மாடு சிறிது நேரத்தில் எனது கண்னெதிரேயே சுருண்டு விழுந்து இறந்து விட்டது, ஆலையில் திறந்து விட்ட ரசாயன தண்ணீர் ஓடையில் கலந்ததே மாடு இறக்க காரணம் என புகார் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்த தகவல் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது, புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மாடு இறந்ததற்க்கான காரணத்தை அறிய அவற்றை மருத்துவர்கள் குழு இன்று பிரேத பரிசோதனை செய்கின்றனர், இச்சம்பவம் அப்பகுதி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. கடந்த வரும் தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதாக தனியாருக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது, இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது , இதில் தமிழக அரசு தரப்பில் கடந்த மாதம் உயர்நீதி மன்றத்தில் வாதிடுகையில் "நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய காரணத்தால்தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு இந்த ஆலை நிர்வாகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து, அதை தூத்துக்குடி சுற்று வட்டாரப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட்டது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 51 தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதில் 33 நிறுவனங்கள் எந்த கழிவையும் வெளியேற்றுவதில்லை. மீதமுள்ள 18 தொழிற்சாலைகளில் ஸ்டெர்லைட் ஆலையின் 4 யூனிட்டுகள் காற்றையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. எஞ்சிய 14-ல் 2 ஆலைகள் வெளியேற்றும் கழிவுகள் சூரிய ஒளியில் ஆவியாகிவிடுகின்றன. இந்த ஆலை ஏற்படுத்தும் மாசுவின் காரணமாகவே, தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. குடிநீரும் குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத தண்ணீராக மாறியுள்ளது. ஆலை மூடிய பிறகு நிலத்தடி நீரின் தரம் மேம்பாடு அடைந்துள்ளது." என வாதிட்டது. இந்நிலையில் அதன் அருகே அமைந்துள்ள மற்றுமொரு ஆலையில் இருந்து வெளியேற்றிய ரசாயன நீரை குடித்ததால் மாடு இறந்து போன சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், மாவட்ட நிர்வாகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது, ஆலைகள் ஜீரோ டிஸ்சார்ஜ் செய்கின்றனவா என கண்காணிக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியத்துடன் செயல்படுவதே இது போன்ற சம்பவத்திற்க்கு காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிலவளம், நீர்வளம் பாதிப்படைந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையிலேயே ஸ்டெர்லைட் தொடர்பான போராட்டம் முதலில் குமரெட்டியாபுரம் பகுதி மக்களால் தொடங்கப்பட்டது, மீண்டும் இது போன்ற போராட்டம் தலைதூக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது என்கின்றனர் பொதுமக்கள். விழித்துக் கொள்ளுமா அரசு ?