பூங்காவை குப்பை சேகரிக்கும் மையமாக மாற்றிய சீர்காழி நகராட்சி!
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி நகரத்தில் கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான 'முருகன் பூங்கா' உள்ளது. இந்த இடத்தை பொதுமக்கள் பூங்காவாக பயன்படுத்தி கொள்ள பொன்னுசாமி பிள்ளை என்பவர் 1954-ஆம் ஆண்டு நன்கொடையாக வழங்கினார். அதிலிருந்து கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பூங்கா செயல்பட்டு வந்தது. இந்த பூங்கா கட்டிடத்தின் பெயராக பொன்னுசாமி நிலையம் என்று வைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் வாசக சாலை செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் படிப்பதற்காக பூங்கா திறக்கப்பட்டு காலை மாலை
நாளிதழ்கள் போடப்பட்டு வந்தது. பொது வானொலி பெட்டியும் பூங்காவில் ஒலிப்பரப்ப பட்டு வந்தது. கடந்த 12 ஆண்டுகளாக பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப் படாமல் பூட்டப்பட்டு உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு சோழ நாட்டு திருப்பணிகள்
திட்டத்தின் கீழ் பல லட்சம் செலவில் பூங்கா சீரமைக்கப்பட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டது. ஒப்பந்தக்காரருக்கு பில் வழங்கப்பட்டதோடு சரி பூங்காவை திறக்காமல் மூடியே வைத்தார்கள். அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் பூங்கா சீரமைக்கப்பட்டது. இதற்கு பல லட்சம் ரூபாய் மக்களின் வரிப்பணம் செவவழிக்கப்பட்டது. வழக்கம் போல் பூங்காவை திறக்காமல் மூடியே வைத்தார்கள். இதற்கிடையே கடந்த ஆண்டு பூங்காவின் முன் பகுதியில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. பூங்காவின் பின் பகுதியை பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டண கழிப்பிடமாக மாற்றி செயல்பட்டு கொண்டு இருக்கிறது. சீர்காழி நகராட்சியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தென்பாதி திருவேங்கடம்பிள்ளை பூங்கா கரிகுளம் காந்திஜி நூற்றாண்டு பூங்கா பெரியார் ரூ.வே.ரா பூங்கா தற்போது திறக்கப்படாத சூழ்நிலையில் முருகன் பூங்காவை திறக்காமல் மக்களை மோசடி செய்கிறது சீர்காழி நகராட்சி. பூங்காவில் பொதுமக்கள் படிக்க வாங்கப்படும் நாளிதழ்கள் நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் படிக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஒருபடி மேலே போய் பூங்காவை குப்பை மேடாக்கி விட்டார்கள். முருகன் பூங்கா மின்னணு சாதன கழிவுகள் சேகரிக்கும் மையமாக மாற்றப்பட்டு விட்டது. இதனால் கடந்த பல மாதங்களாக மூட்டை மூட்டையாக பூங்காவில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. பூங்கா இடத்தை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்று சென்னை ஐகோர்ட் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. இதையெல்லாம் மதிக்காமல் நன்கொடை அளிக்கப்பட்ட பூங்காவை குப்பை கூடாரமாக மாற்றிய சீர்காழி நகராட்சிக்கு தமிழ்நாட்டின் மிக சிறந்த நகராட்சி என்று விருதே அளிக்கலாம். ஏற்கனவே போலியாக சிறந்த நகராட்சி விருது சீர்காழி நகராட்சிக்கு தரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்காத சீர்காழி நகராட்சி குப்பை கூடாரமாக மாற்றியது கொடுமையிலும் கொடுமை. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி தலைவர் உடனே நடவடிக்கை எடுப்பாரா என்று பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.