விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறை - விநாயகர் சிலை பாதுகாப்புக் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமை வகித்தார். ஆய்வாளர்கள் சுதேசன் (கிழக்கு), அய்யப்பன் (மேற்கு), ஆவுடையப்பன் (கயத்தாறு), சுகாதேவி (நாலாட்டின்புத்தூர்), முத்துலட்சுமி (கழுகுமலை) மற்றும் உதவி ஆய்வாளர்கள், இந்து முன்னணி மற்றும் இந்து மகாசபா அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். விநாயகர் சிலைகள் வைப்பதற்கான விண்ணப்பத்தை மின்வாரியம், தீயணைப்புப் படை மற்றும் விநாயகர் சிலை வைக்கும் இடத்தின் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். விநாயகர் சிலை 10 அடி உயரத்திற்கு மிகாமலும், ரோட்டில் எடுத்து செல்லும் அளவுக்கு அகலம் குறைவானதாகவும் இருக்க வேண்டும், விநாயகர் அமைக்கப்படும் போது டின் சீட்டிலான மேற்கூரையே அமைக்க வேண்டும், விநாயகர் சிலை அமைக்கப்படும் இடத்தில் விநாயகர் சிலை வைத்ததில் இருந்து எடுக்கும் வரை 24 மணி நேரமும் சிலைப் பொறுப்பாளர்கள் 2 பேர் இருக்க வேண்டும். சிலை வைக்கும் இடத்தில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் வைக்கக் கூடாது, தீயை அணைக்கக் கூடிய தண்ணீர், மணல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், விநாயகர் சிலை அமைக்கப்பட்ட இடத்தில் ஜெனரேட்டர் வசதி செய்ய வேண்டும். விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தில் ஒலி பெருக்கி முன் அனுமதியை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பெற்றப் பிறகே காலை மற்றும் மாலை நேரங்களில் 2 மணி நேரம் மட்டுமே ஒலிபரப்பு செய்ய வேண்டும், விநாயகர் சிலை விஜர்சனம் செய்ய எடுத்துச் செல்லும் போது மாட்டு வண்டியிலோ, 3 சக்கர வாகனத்திலோ எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது, விநாயகர் சிலை விஜர்சனம் செய்ய எடுத்துச் செல்லும் வாகனத்தின் ஆவணங்கள், வாகன ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சம்பந்தப்பட்டகாவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பிற மதத்தினர் மனது புண்படும் படியாக எந்த கோஷங்களுக்கும் எழுப்பக் கூடாது, பிற மத வழிபாட்டுத் தலங்கள் முன்பு பட்டாசு வெடிக்கவோ, பாண்டு வாத்தியங்கள் இசைக்கவோ கூடாது. கடந்த ஆண்டு அனுமதிக் கப்பட்ட ஊர்வலப் பாதை வழியாகவே இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலர் செல்ல வேண்டும், கடந்த ஆண்டு யார் யாருக்கு எந்தெந்த நேரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டதோ, அதே போல, குறித்த நேரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஆரமித்து, குறித்த நேரத்திற்குள் ஊர்வலத்தை முடிதிருக்க வேண்டும். கடந்த ஆண்டு விநாயகர் சிலை எந்த வழியாக சென்று கரைக்கப்பட்டதோ, இந்த வருடமும் அதே வழியாகச் சென்று விநாயகர் சிலையை கரைத்து திரும்ப வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலத்தை சிறப்பாக நடத்த காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.