பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்? நெல்லையில் ஸ்டாலின் கேள்வி. மாவீரன் ஒண்டிவீரன் 248 ஆவது நினவு தினத்தை முன்னிட்டு அவரது மணிமண்டபம் அமைந்துள்ள சமாதானபுரத்தில் அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் :-
ஆங்கில படையை எதிர்த்து போரிட்டவர் ஒண்டிவீரன். அவருக்கு தலைவர் கலைஞரின் ஆட்சியில் தான் மணிமண்டபம் கட்டுவதற்கும் , அவருக்கு திருவுருவச் சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டடு இன்றைக்கு இந்த மணிமண்டபம் இங்கே அமைந்திருக்கிறது. அருந்ததியர் சமுதாயத்தினருக்கு கல்வி , வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வெறும் அறிவிப்போடு நிறுத்திக் கொள்ளாமல் அதை சட்டமன்றத்திலேயே தீர்மானமாகக் கொண்டு வந்து சட்ட வடிவம் நிறைவேற்றியது தலைவர் கலைஞர் அவர்கள். அந்நாளில் உடல் நலிவுற்ற நிலையில் மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது அவருக்கு பதிலாக துணை முதலமைச்சராக நான் அந்த சட்டத்தை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினேன். அது எனக்கு கிடைத்த பெருமை. அந்த பெருமையுடைய உரிமையோடு ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தி மகிழ்ச்சி அடைகிறேன், அதிமுக ஆட்சியில் பால் விலை 3-வது முறையாக உயர்ந்துள்ளது, கொள்முதல் விலை உயர்வால், பால் விலை உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன் ? தற்போது ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றவர்கள் ஊழல், லஞ்சம், கொள்ளை என அனைத்தையும் மூடி மறைப்பதற்கு மாவட்டங்களை பிரிக்கின்றார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.