திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் தலைவர் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.செம்மலை அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செம்மலை அவர்களுடன், உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி (திருவெரும்பூர்), எஸ்.ஈஸ்வரன் (பவானி சாகர்), முனைவர் கோவி.செழியன் (திருவிடைமருதூர்), அ.சண்முகம் (கிணத்துக்கடவு), கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்) அவர்களும், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செம்மலை பேசுகையில்,
இந்திய ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக சட்டமன்றம் திகழ்கிறது. சட்டமன்றப் பேரவை சட்டமன்றப் பேரவை தலைவர் அவர்கள் தலைமையில் இயங்கி வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொத்தம் 12 குழுக்கள் உள்ளது. இக்குழுக்களில் பொது நிறுவனங்கள் குழுவானது முக்கியமான குழுவாகும். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நல்லாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலன்கருதி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவித்த திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அனைத்து திட்டங்களும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது அரசின் கடமையாகும்.
அதன்படி ஒவ்வொரு மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கையினை இக்குழு சமர்ப்பிக்கும். மேலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பாக 2018-2020-ஆம் ஆண்டிற்கான ஒதுக்கப்பட்ட தொகை, நடைபெற்ற திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஆகிய துறைகளில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்போது துறைகள் ரீதியாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அக்கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று இக்குழுவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அரசு அலுவலர்கள் தாங்கள் ஆற்றும் பணியினை தன்னலமற்ற சேவையாக தொடரவேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2018-20-ம் ஆண்டிற்கான பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.செம்மலை அவர்கள் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆய்வுக்கூட்டத்தில் கனிமவளம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஆகிய துறைகள் ரீதியாக, தணிக்கை பத்திகள் மற்றும் நடவடிக்கைகள், மேற்கொண்ட பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள், பணியாளர்கள் நியமிப்பது, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக, தாராபுரம் சாலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்ட்டு வரும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் சி.டி.ஸ்கேன் பொருத்தும் பணிகள் உட்பட பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்தார்கள். மேலும், திருப்பூர் மாவட்டத்தில், புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு இந்தக்குழு பரிந்துரை செய்யும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து, சந்திராபுரத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் திருப்பூர் மாநகராட்சியில் கூடுதல் பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தி மற்றும் கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் சுமார் 10.00 இலட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும் மற்றும் சுமார் 7.50 இலட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணியினையும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படும் கல்லாங்காடு, கருப்பகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள வீரபாண்டி பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் மற்றும் காங்கயம் சாலை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையினையும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), ஜெயராமகிருஷ்னன் (மடத்துக்கு.திளம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் இ.கா.ப. மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.ஆர்.சுகுமார்,திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் .க.சிவகுமார், சட்டமன்ற பேரவை துணை செயலாளர் .திஎம்.கருணாகரன், குழு அலுவலர் பா.ரவிச்சந்திரன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சாகுல் ஹமீது (பொது), .பாலசுப்பிரமணியம்,(வளர்ச்சி), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் .ரகுபதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார், உட்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.