ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன என தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கடந்த 45 வருடங்களாக இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சியை பார்க்கமுடிகிறது. வேலை இல்லா திண்டாட்டம் மக்களை பாதித்துள்ளது. இதனை சரி செய்ய மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யாமல் உள்ளது. கடந்த முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த போதும் அப்போதைய மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுத்து, இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.
தற்போது மத்திய அரசு எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் மேற்கொள்ளாமல், திட்டங்களில் தொலைநோக்கு பார்வையில்லாமல் ஆட்சி செய்து வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும், ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்தித் துள்ளதை கண்கூடாக பார்க்கமுடிகிறது. எனவே இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்துவது மிகப் பெரிய பிரச்சனையை உருவாக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும், இந்திய அளவில் உள்ள பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துவரும் திமுக தலைவர் ஸ்டாலின் பணிகளை பார்த்து பெருமைப்படுகிறேன் என்றார். மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் பல பொருளாதார மாநாடுகளை நடத்தி ஒன்றும் செய்ய முடியாத தமிழக முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார். பேட்டியின் போது அவருடன் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் திமுக வடக்கு மாவட்ட பொருப்பாளர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் N.P. ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மாணவரணி துணை செலாளர் உமரி சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்