அத்திவரதர் தரிசனத்துக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், ' குட்டி வரதராக ' வந்த இரு சிறுவர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் விவிஐபி தரிசனத்தில் அனுமதி அளித்த சுவாரசிய சம்பவம், காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.
நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தரிசனம் என்பதால் அத்திவரதரைக் காண பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு வருகிறார்கள். சிங்கப்பூர், மலேசியா இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அத்திவரதரைக் காண லட்சக்கணக்கில் வருகிறார்கள்.கடந்த 31 நாள்களாக சயனக் கோலத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்தார் அத்திவரதர். சயன கோலத்தில் கடைசி நாளில், `எப்படியாவது அத்திவரதரை தரிசித்துவிட வேண்டும்' என்று பக்தர்கள் கால்கடுக்க நின்று கொண்டிருந்தார்கள். அந்தநேரத்தில் இரண்டு சிறுவர்கள் அழுதவாறு கோவிலில் இருந்து வெளியே வந்தனர்.அந்த சிறுவர்கள் கூறியது, சுங்குவார்சத்திரத்துல இருந்து வந்திருக்கிறோம். என் பெயர் நவீன். அப்பா, அம்மா இங்க அத்திவரதர் பட வியாபாரம் செய்யறாங்க. அம்மா அப்பாவுக்கு உதவி செய்ய வந்துருவோம். இவளோ கூட்டம் வந்து பார்க்குற சாமியை நாமும் பார்க்கணும் என ஆசையாக இருந்தது. என்னோட தம்பி வெற்றி, `கூட்டம் குறைவாக இருப்பதால், இன்னிக்கு சாமி பார்க்க போலாம்னு சொன்னான். நாங்கள் வரிசையில் வந்தோம். ஆனா கோவிலுக்கு பக்கத்தில் வந்ததும், விஐபி வரிசையில் பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாதுனு சொல்லி திருப்பி அனுப்பினர். வேறு வழியில்லாமல் வெளியே போகிறோம். என்றனர்.`அத்திரவதரை தரிசிக்க வேண்டும்' என்ற ' குட்டி வரதர்களின்' ஆசை அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து, அந்தச் சிறுவர்களுக்கு வி.வி.ஐ.பி வழியாகச் செல்ல காவலர்கள் அனுமதித்தனர். வி.ஐ.பி-யைவிட வி.வி.ஐ.பி வரிசை காலியாகவே இருந்தது. ஆனந்தமாக தரிசனம் செய்து விட்டு, வெளியே வந்தனர், அந்த ' குட்டி வரதர்கள்.'வறுமைக் கோட்டின் விழிம்பில் வாழும் சிறுவர்களுக்கும் அத்திவரதரின் விவிஐபி., தரிசனம் கிடைத்துள்ளது. இறைவனின் படைப்பில் எல்லா உயிர்களும் சமம் தானே!