திருப்பூர் பழைய பஸ் நிலையம் பின்புறமுள்ள காமாட்சி அம்மன் கோவில் வீதியில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது.நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த கோவிலில் அரசு, வேம்பு மரங்கள் ஒருங்கிணைந்து வளர்ந்து உள்ளது. இந்த கோவிலில் அரசு, வேம்பு மரங்கள் தெய்வமாகவே வணங்கப்படுகிறது. இந்த மரத்தினடியில் சித்தி விநாயகர், கன்னிமார், ராகு கேது உள்ளிட்ட சாமி சிலைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த கோவிலில் இன்று காலை அரசு, வேம்பு திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதையொட்டி, விஷேஷ யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அரசு வேம்வு திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதில் அரச மரம் சிவனாகவும், வேம்பு மரம் பார்வதியாகவும் பாவிக்கப்பட்டு, அரச மரத்துக்கு பட்டு வேட்டி உள்ளிட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்டன. வேப்ப மரத்துக்கு மஞ்சள் புடவையில் நகைகள், வளையல்கள் சாத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பகுதி பெரியவர் ஒருவர் அரச மரத்தை வணங்கி வேப்பமரத்துக்கு தாலிகட்டினார். அப்போது பக்தர்கள் 'ஹர ஹர மகாதேவா' என்றும், 'ஓம் சக்தி, பராசக்தி' என்றும் கோஷமிட்டு, பக்தி பரவசத்துடன் சாமிதரிசனம் செய்தனர். தொடர்ந்து விநாயகருக்கு அலங்கார பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் எம்.விஸ்வமூர்த்தி செய்து இருந்தார்.