பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினசரி சிலம்பு ரயில் ஓடுமா?
சிவகாசி: செங்கோட்டையில் இருந்து மானாமதுரை வழியாக சென்னைக்கு வாரம் மும்முறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை, தினசரி இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொல்லம்-செங்கோட்டை அகலரயில் பாதை பணி முடிவடைந்து புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த வழித்தடத்தில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் வரை எக்ஸ்பிரஸ் ரயில், கொல்லம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில்கள் புதிதாக இயக்கப்பட்டு வருகின்றன.
இவைகளுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வழித்தடத்தில் மானாமதுரை-காரைக்குடி வழியாக சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. இதே போல் இந்த வழித்தடத்தில் மதுரை, திருச்சி வழியாக சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும் தினசரி இயக்கப்படுகிறது.
காரைக்குடி, மானாமதுரை வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவில்லை.
எனவே, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர. இதேபோல, மதுரையில் இருந்து பழனி வழியாக கோயமுத்தூர் செல்லும் பாசஞ்சர் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்கவும், தாம்பரம் -செங்கோட்டை அந்தியோதயா ரயிலை உடனடியாக இயக்கவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், மதுரையில் இரவு நேரத்தில் குருவாயூருக்கு சிவகாசி ராஜபாளையம், செங்கோட்டை வழியாக புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும். பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த மகளிர் மற்றும் ஊனமுற்றோர் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.
இதற்கு பதில் இரண்டு ஜெனரேட்டர் பெட்டிகளும், இரண்டு ஏசி பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த ரயிலில் கூட்ட நெரில் இருப்பதால் பயணிகள் படிகளில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். எனவே, பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் என்ஜினை அடுத்து மூன்று பொதுப்பெட்டிகளும், பின் பகுதியில் மூன்று பெட்டியும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை-கொல்லம் வழித்தடத்தில் ஏழை பயணிகள் பயன்பெறும் வகையில், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் நவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளளனர்.