தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு அளிப்பதற்காக குலையன்கரிசல் கிராம விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து விவசாய சங்க நிர்வாகி ஆஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கிராமத்தில் விவசாயிகளின் நிலம் வழியே ஸ்பிக் உரத்தொழிற்சாலைக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்லும் பணிக்காக தனியார் நிறுவனத்தினர் பணி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு விவசாயிகள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் தனியார் நிறுவனத்தினர் கண்டுகொள்ளவில்லை. விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் மூலமாக விவசாயம் அழிந்து போகும் நிலை ஏற்படும். ஆகவே விவசாய நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தினை தடுத்து நிறுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் எரிவாயு குழாய் பதித்து திட்டத்தினை செயல்படுத்த பொதுமக்கள், விவசாயிகள் ஆகிய நாங்கள் ஆதரவு தர தயாராக இருக்கிறோம். மாறாக விவசாய நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் பணி தொடர்ந்தால் அடுத்த கட்டமாக சாலை மறியல் உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாய சங்கம் முன்னெடுக்கும் என்றார். தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு அளித்தனர்.