ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: வரலாற்றில் முதல்முறையாக பக்தர்கள் கூட்டம் இல்லாமல் நடந்தது
May 4, 2020 • தமிழ் அஞ்சல் சுரேஷ்

பக்தர்கள் இல்லாமல் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.

மதுரை,
மதுரை அரசிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வருவார்கள். ஊரும் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ரத்து செய்யப்பட்டது. மேலும், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடக்காது என்று அறிவிக்கப்பட்டது. எனினும், பக்தர்களுக்காக மீனாட்சி திருக்கல்யாண வைபோகம் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது.

காலை 6 மணிக்கு தொடங்கி விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், பஞ்சகவ்யம், பாலிகை பூஜை, ரஷ்பந்தன பூஜை, கலச பூஜை, அக்னி காரியம், சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல், மங்கள நாண் அணிவித்தல், பொரியிடுதல், பூர்ணாஹுதி, விசேஷ தீபாராதனை, மந்திர புஷ்பம், சதுர்வேதம், பஞ்சபுராணம், ஆசீர்வாதம், பிரசாதம் என 15 நடைமுறைகளின் படி நடைபெற்றது.

இன்று காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் திருக்கல்யாணம் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் நடந்தது.


இந்த நிகழ்வில் சிவாச்சாரியார்கள், மங்கள வாத்தியக் கலைஞர்கள், சீர் பாதங்கள் உள்ளிட்ட 42 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 3 போலீசார் மட்டும் கோவில் உள்ளே பாதுகாப்பு பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட 42 பேரும் தெற்குக் கோபுர வாசல் வழியாக மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணக்கோலத்தில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் திருமணம்  நடைபெற்றது