பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தில் திடீரென தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்த தேங்காய் சிவலிங்கம் வடிவில் இருந்ததால் வியந்துபார்த்து பாலாபிஷேகம் செய்து பூஜைகள் செய்து வழிபட்ட பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம், பட்டுகோட்டை அடுத்த நாட்டுச்சாலை கிராமத்தில் கீழத்தெருவில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. நேற்று இரவு சிவன் ராத்திரியை முன்னிட்டு இந்த கோயிலுக்கு திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு அதிசயம் நடந்தது.
அந்த கோயில் வளாகத்தில் உள்ள தென்னை மரத்திலிருந்து திடீரென ஒரு தேங்காய் கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்த தேங்காயை பார்க்கும்போது அச்சு அசல் சிவலிங்கம் வடிவில் இருந்துள்ளது. உடனே அங்கிருந்த பக்தர்கள் சிவன்ராத்திரி அன்று இதுபோல் சிவபெருமான் நமக்கு காட்சியளிக்கிறார் என்று சிவலிங்கம் வடிவில் இருந்த தேங்காயை எடுத்து வைத்து சிவனாக நினைத்து வழிபடத் தொடங்கினர்.
இந்த செய்தி அருகில் உள்ள பொதுமக்களுக்கும் பரவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஒன்று திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சிவலிங்கம் வடிவிலான தேங்காய்க்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்ததுடன் சிறப்பு பூஜைகளும் செய்து வழிபட்டு வருகின்றனர்.