அணைக்காக உயிரையே தந்த சிறுமிகள்... குலதெய்வமாக வழிபடும் பொதுமக்கள்!

நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டி அணை நடுவே உள்ள நல்லம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.



கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அருகே உற்பத்தியாகி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 165 கி.மீ., மட்டுமே பயணம் செய்து காவிரியில் கலக்கும் ஆறு தான் நொய்யல் ஆறு. காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறாக இருக்கும் இந்த ஆற்றின் நீர்ப்பிடிப்பு என்பது சிறுவாணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியே ஆகும். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக கோவை, திருப்பூர் பகுதியில் நொய்யல் ஆற்று நீர் குடிப்பதற்கு சுவை மிகுந்த ஆறாகவே இருந்திருக்கிறது. அதை புழங்கிய பெரியவர்கள் இதை சொல்லி சிலாகிப்பதை இன்றும் காண முடிகிறது.


அப்படி மிகச்சிறந்த சுவைமிகு தண்ணீர் தந்த இந்த ஆற்றில், கொங்கு சோழர்கள் காலத்தில் தான் பெருமளவு பாசனத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  32 இடங்களில் குளங்கள் அமைக்கப்பட்டு நொய்யல் ஆற்று நீர் சேகரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த குளங்களில் சேமிக்கப்படும் தண்ணீருக்காக 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும் கட்டப்பட்டு உள்ளன. அதில் இன்றளவும் பல அணைகள் பெரும் கல் கட்டுமானங்களாக இருக்கின்றன.

அந்த வகையில், மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை தான் தியாகத்தின் சின்னமாகவே இருக்கிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அணை கட்டப்பட்ட போது, அணை உடையாமல்  இருப்பதற்காக நல்லம்மன்  என்று சிறுமி உயிர்த்தியாகம் செய்தார். அணைக்காக உயிரையே தியாகம் செய்த நல்லம்மன் என்ற அந்த சிறுமியை கன்னிமார் தெய்வமாக, குலதெய்வமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வழிபட்டு வருகின்றனர். 

அந்த அடிப்படையில் திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் அணை நடுவே உள்ள நல்லம்மன் கோவிலில் ஆடி மாதம் ஒரு பிரிவினரும், கார்த்திகை மாதத்தில் ஒரு சமூகத்தினரும் பொங்கல் விழா நடத்துகின்றனர். இதில் நொய்யல் ஆற்றில் அணை நடுவே உள்ள நல்லம்மன் கோவிலில் பொங்கல் வைத்து, சிறுமிகளுக்கு பிடித்த தின்பண்டங்கள் படைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபடப்பட்டது. மேலும், நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்னீர் வர வேண்டும் என்று ஆற்றுக்கு பூஜை செய்து பூக்கள் தூவி வழிபாடு நடத்தப்பட்டது. 

 இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நல்லம்மனுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

இதுகுறித்து கோவிலில் பூசாரி திருமூர்த்தி கூறுகையில்,’அணைக்காக உயிரை தியாகம் செய்த சிறுமிகளை இரு சமூகத்தார் குல தெய்வங்களாக வணங்கி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18க்கு அடுத்த செவ்வாய்கிழமை  பொங்கல் வைத்து நல்லம்மனுக்கும், கன்னிமார் தெய்வங்களுக்கும் படைத்து மக்கள் நலம்வாழவும், ஆற்றில் ஆண்டுமுழுக்க தண்ணீர் வரவும் வேண்டுமென வழிபாடு நடத்துகிறோம்’ என்றார். 
Previous Post Next Post