தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு.!
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் கள ஆய்வு பணிகளை இன்று மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் மற்றும் லால்குடி சட்டடமன்ற உறுப்பினர் அ.சவுந்தரபாண்டியன் தலைமையிலான குழுவினர், ஓட்டப்பிடாரம் வட்டம் மேலஅரசடி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக காற்றாலை மூலம் 3.3 மெகாவாட் மின்சாரம் எடுக்கப்படுவதை பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து தருவைகுளத்தில் உள்ள மாநகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் எரிசக்தி தன்னிறைவிற்கு (எனர்ஜி செக்யூரிட்டி) தன்னிகரற்ற பங்கு வீதத்தை அளித்துக் கொண்டிருக்கும் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தினை பார்வையிட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிக திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களில் (1050 மெ.வாட்) ஒன்றாகத்; திகழ்ந்து தமிழ்நாடு மின் கட்டமைப்பின் 7 சதவிகித மின் தேவையைப் பூர்த்தி செய்யும் மற்றும் ஒரு நாள் மின் உற்பத்தி அதிகபட்சமாக 25.2 மில்லியன் யூனிட் கொண்ட அனல்மின் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து வ.உ.சி. துறைமுகத்தின் செயல்பாடுகளை கப்பல் மூலமாக சென்று பார்வையிட்டு கேட்டறிந்தனர். மேலும், வ.உ.சி. துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள துறைமுக தகவல் மையம் மற்றும் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் நிலையத்தினையும் பார்வையிட்டனர்.
ஆய்வில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு 2023-2024 உறுப்பினர்கள் உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.தி.சதன்திருமலைக்குமார், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.