திருப்பூர் உஷா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் பிளக்ஸ் பேனர் வைப்பதில் பாஜக மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் பாஜகவினர் பேனரை தூக்கி கொண்டு இஸ்லாமியர்கள் பகுதிக்கு ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்கள் முன்பு முதலே எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக மதுரையில் நடைபெறும் மாநாடு தொடர்பாக உஷா தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பேனரை அகற்றும் படி போலீசார் தரப்பில் கூறியதாக கூறப்படுகிறது. எஸ்.டி.பி.ஐ., பேனர் அகற்றப்பட்ட நிலையில் பாஜக சார்பில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்த பேனர் வைக்கப்பட்டது.
இதை கண்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பாஜக பேனரை அகற்ற வேண்டும் என போராட்டம் நடத்திய நிலையில் பாஜகவின் பேனர் அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். அதை தொடர்ந்து மீண்டும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அங்கு பேனரை வைத்தார்கள்.
இந்தநிலையில் தங்களது பேனரை அகற்றியதை கண்டித்து பாஜகவினர் பிளக்ஸ் பேனர் உடன் சிடிசி கார்னர் வரை பேரணியாக சென்றனர். அப்போது ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியை நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் துணை கமிஷனர் வனிதா தலைமையிலான போலீசார் பாஜகவினரை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அங்கு பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்ப்பட்ட பாஜகவினரை கைது செய்தனர்.
மேலும் பாஜகவினர் வைத்திருந்த பேனரையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். மேலும் உஷா தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில் எஸ்.டி.பி.ஐ., சார்பில் வைத்திருந்த பேனரையும் அகற்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேனர் அகற்றப்பட்டது.
போலீசார் தரப்பில் கூறுகையில், இரண்டு தரப்பினருக்கும் பேனர் வைக்க அனுமதி வழங்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.