தூத்துக்குடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, சுடுகாட்டில் பிளம்பர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி புதுக்கோட்டை அய்யனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் மகாராஜன், பிளம்பர் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 10 வருடங்களாக வீட்டை விட்டு பிரிந்த நிலையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி விபத்தில் இறந்துள்ளார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வீட்டை விட்டு பிரிந்து இவர் மது அருந்திவிட்டு மையவாடியில் படுத்து உறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சம்பவத்தன்று மகராஜன் தனது நண்பரும் உறவினருமான தூத்துக்குடி ராஜிவ் நகரை சேர்ந்த டிரைவர் மாரிமுத்து என்பவருடன் ஆயுதப்படை அலுவலகம் அருகே உள்ள மையவாடியில் இருந்து மது அருந்தி உள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, மஹாராஜனை மையவாடியில் கிடந்த கல் மற்றும் கட்டையால் தலை மற்றும் முகத்தில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மகாராஜன் பரிதாபமாக இறந்தார்.
பின்னர், காவல் நிலையத்தில் சரணடைந்து தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மற்றும் தெற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சரணடைந்த மாரிமுத்துவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து நல்ல நிலையில் இருந்து வந்த போது, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும், தொடர்ந்து மது அருந்தி விட்டு தொழிலில் ஈடுபாடு காட்டாத காரணத்தினால் அனைத்தையும் இழந்து விட்டதாகவும், தனது நிலைக்கு தனது உறவினர் பிளம்பர் மகாராஜன், அவரது அம்மா மூலம் செய்வினை செய்ததே அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்ப்பட்டதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக இருவரும் மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று அவ்வாறு மது அருந்திவிட்டு இருவரும் மையவாடியில் படுத்தபொழுது, மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்து மகாராஜனை கட்டையால் அடித்துக்கொன்றதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.