மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது வீரர், வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க 7 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் தலைவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக உ.பி., லோக்சபா எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் உள்ளார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன. இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உட்பட ஒட்டுமொத்த மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி துாக்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தவிர இந்தியாவில் உள்ள அனைத்து டபிள்யு.எப்.ஐ., அமைப்பையும் கலைத்து விட்டு, புதிய கூட்டமைப்பு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இவர்களின் போராட்டம் 3 நாட்களாக நீடித்து வந்தது
இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கம், மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க 7 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமிப்பதாக உறுதியளித்தது.
இந்த குழுவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, பளுதூக்குதல் கூட்டமைப்பு தலைவர் சதேவ் யாதவ், அலாக்நந்தா அசோக் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு நான்கு வாரங்களாக விசாரணையை மேற்கொள்ளும் என தெரிகிறது.
இது குறித்து மல்யுத்த வீரர் பஜ்ராங் புனியா மேலும் கூறியதாவது, ‛.மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் எங்கள் கோரிக்கையை ஏற்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். அவருக்கு எங்களது நன்றியினை தெரிவிக்கிறோம். இதையடுத்து எங்களது போராட்டத்தினை விலக்கி கொள்கிறோம்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.