பழனி மலைக்கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலையில் முதல்கால வேள்விகள் தொடங்கியது

 பழனி மலைக்கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலையில் முதல்கால வேள்விகள் துவங்கியது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வேதவிற்பன்னர்கள் கலந்து கொண்டு மந்திரங்களை முழங்கினர்.

      பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 வருடங்களுக்குப் பிறகு வரும் ஜன.27ம் தேதி திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் உள்ள தங்கவிமானம், தங்க சப்பரம், தங்கமயில், தங்கத்தேர் மற்றும் சுதை சிற்பங்கள், பிரகாரங்களில் உள்ள சுவாமி சன்னதிகள் உள்ளிட்டவை புத்தம் புதியதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்ச்சியான யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை துவங்கியது. 


காலையில் பாதவிநாயகர் கோயிலில் பரிவார உப தெய்வகள் திருக்குடங்கள் அலங்கரிக்கப்பட்டு வேள்விச்சாலை புகுதல் நடைபெற்றது. பிற்பகல் மூன்று மணிக்கு மேல் மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அஷ்டபந்தனம் செய்தல் மற்றும் மூலஸ்தானம், அர்த்தமண்டபம் பணிகள் பொருட்டு திரையிடப்பட்டது. முன்னதாக பாரவேல் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட இறை திருக்குடங்களில் மூலவர் அருட்சக்தியை திருக்குடங்களில் எழுந்தருள செய்து உட்பிரகாரம் மேளதாளம் முழங்க உலா வர செய்யப்பட்டது. பின்னர் திருக்குடங்கள் கார்த்திகை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலைக்கு எழுந்தருள செய்யப்பட்டது. கார்த்திகை மண்டபத்தில் சுமார் 90க்கும் மேற்பட்ட வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வேதவிற்பன்னர்கள் மந்திரம் ஒத முதல்கால வேள்வி துவங்கியது. மூலவருக்கு அமைக்கப்பட்ட பிரதான மேடையில் திருக்குடங்கள் எழுந்தருள செய்து தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து தேன், நெய், காய்கள், பழங்கள் 12 விதமான மூலிகைகள் கொண்டு பூர்ணாஹூதி செய்யப்பட்டு வேள்வி நிறைவு செய்யப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது. வேள்விச்சாலையில் ஓதுவார்கள் பன்னிரு திருமுறை பாடல்கள் பாடினர். நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


- பழனி ரியாஸ்
Previous Post Next Post