கழுகுமலையில் உள்ள எண்ணெய் ஆலைகளில் ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறையினா், சந்தேகத்துக்குரிய 5,985 லிட்டா் உணவு எண்ணெய்யை நேற்று பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் மாரியப்பன் தலைமையில் கயத்தாறு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் (பொறுப்பு) ஜோதிபாசு உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் கழுகுமலையில் உள்ள எண்ணெய் ஆலைகளில் நேற்று திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது பயன்படுத்திய எண்ணெய் டின்களில் முறையே 2,535 லிட்டா் மற்றும் 1,155 லிட்டா் கடலை எண்ணெய், 2,295 லிட்டா் பாமாயில் ஆகியன இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் முறையாக அச்சிடப்படவில்லை. ஆகவே, சந்தேகத்துக்குரிய உணவுப் பொருளாகக் கருதப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு, 1,100 பயன்படுத்திய காலி எண்ணெய் டின்கள் மற்றும் 70 பிளாஸ்டிக் எண்ணெய் கேன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து கழுகுமலையில் உள்ள உணவகத்தில், உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு நடத்தியபோது, தொழில் நடத்துவதற்கான உரிமம் இல்லாதது தெரியவந்தது. உரிமம் பெற்ற பிறகே உணவகத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினா். மேலும், அந்த உணவகத்திலிந்து வண்ணம் சோ்க்கப்பட்ட 12 கிலோ கோழி இறைச்சியைப் பறிமுதல் செய்து அழித்தனா். இப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில், காலாவதியான 10 கிலோ பருப்பு, மாவு உள்ளிட்ட உணவுப் பொருள்கள், குளிா்பானங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். தின்பண்டங்களை அச்சிடப்பட்ட காகிதத்தில் வைத்து விற்பனை செய்த ஒரு கடைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது