தூத்துக்குடி மாவட்டத்தில் ‘மாண்டஸ்” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - ஆட்சியர் தகவல்.!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘மாண்டஸ்” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பு: வானிலை மாற்றம் காரணமாக தூத்துக்குடியில் மிதமான மழை பெய்யும் என்று தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறார்கள். இருந்தாலும் வங்க கடலில் ஏற்பட்டிருக்கின்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ்  புயலாக மாறி வட தமிழ்நாட்டு கரையோரம் கரையை கடக்க இருக்கிறது. இன்றைய வானிலை மாற்றத்தில் தூத்துக்குடியில் மிதமான மழை இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள், இனிவரும் நாட்களில் அதிகமாக மழை பெய்யும் பட்சத்தில் தூத்துக்குடியில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். 

நமது மாவட்டத்தில் கிட்டத்தட்ட 36 இடங்கள் மழைநீர் அதிகமாக தேங்கக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டு, அங்கே பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள தயாராக இருக்கின்றனர். இந்த 36 இடங்களிலும் கிட்டத்தட்ட 5 இடங்கள் அதிகமாக மழை நீர் தேங்கக் கூடிய இடங்கள் என்று கண்டறியப்பட்டு அந்த இடங்களிலும் நாம் நிவாரண நடவடிக்கைகளுக்காக முன்னெச்சரிக்கையாக அலுவலர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். 

நமது மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் பட்சத்தில் அங்குள்ள மக்களை தங்க வைப்பதற்காக 97 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிவாரண மையங்களுக்கு பல்வேறு துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து நிவாரண மையங்களில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளனர். அதேபோல் மற்ற துறைகளான நெடுஞ்சாலை துறையின் மூலம் சாலைகளில் பள்ளங்கள் இருந்தால் அவை உடனடியாக மூட வழிவகை செய்யப்பட்டு வருகிறது. 

நமது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டும், 400க்கும் மேற்பட்ட ஏரிகள் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. 647 ஏரிகள் இருக்கின்ற இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும், வரத்த கால்வாய், போக்கிட கால்வாய் ஆகியவற்றை தூர்வாரி வைத்திருக்கின்றோம். மேலும் ஆற்றுப் படுகை மற்றும் கண்மாய்களின் கரைகள் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த கிராமங்களை சேர்ந்த தன்னார்வலர்களைக் கொண்டு பேரிடர் கால நண்பன் என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பயிற்சிகளும்,பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுடைய முக்கியமான பணி மழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தால் அப்பகுதிகளில் இருக்கின்ற மக்களை உடனடியாக நிவாரண மையங்களுக்கு அழைத்து வருவது ஆகும்.மீனவர்களைப் பொறுத்தவரை மீன்வளத் துறை, வருவாய்த் துறை மற்றும் கடலோர காவல்த்துறை ஆகியோர் மூலம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளார்கள். ஆழ்கடல் மீனவர்களுக்கும் சரியான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.