தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 2பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6,40,000/- மதிப்புள்ள 9 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான WGC ரோடு, மணிநகர், பாளையம்கோட்டை ரோடு, டூவிபுரம் உட்பட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருச்சக்கர வாகனங்கள் அடுத்தடுத்து திருடு போயுள்ளது. இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் மற்றும் வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், தென்பாகம் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ஆனந்த கிருஷ்ணகுமார், காவலர்கள் செந்தில்குமார், திருமணிராஜன் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி கேமிரா பதிவுகளின் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி பி அன் டி காலனி பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை பாண்டியன் மகன் ராமர் (31) மற்றும் பசும்பொன் நகரை சேர்ந்த தளவாய் மகன் பரமசிவன் (எ) சிவா (28) ஆகிய இருவரும் சேர்ந்து தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.6,40,000/- மதிப்புள்ள 9 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்த எதிரிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.