தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 09.07.2022 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்தல் தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மறவன்மடம், முடிவைத்தானேந்தல் ஆகிய பகுதிகளில் 2 வார்டு உறுப்பினர் பதவிக்கும்,
திருச்செந்தூர் உட்கோட்டத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டியன்பட்டினம், பிச்சிவிளை ஆகிய பகுதிகளில் 3 வார்டு உறுப்பினர் பதவிக்கும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் பகுதியில் ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும்,
மணியாச்சி உட்கோட்டத்தில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்திரகிரி பகுதியில் ஓரு வார்டு உறுப்பினர் பதவிக்கும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளாளன்கோட்டை பகுதியில் ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும்,
சாத்தான்குளம் உட்கோட்டத்தில் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிப்பன்குளம் பகுதியில் ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் மற்றும் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளாளன்விளை பகுதியில் ஒரு வார்டு உறுப்பினர் பதவிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் வைத்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் இத்தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் தலைமையில் 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 8 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 300 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்புப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் திருச்செந்தூர் ஆவுடையப்பன், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மணியாச்சி சங்கர், சாத்தான்குளம் அருள், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத் உட்பட உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.